எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட தயாரா? - எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சவால்
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
நெல்லை,
நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலையில் தொகுதிக்கு உட்பட்ட மருதகுளம், ரெட்டியார்பட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சி மத்திய அரசுக்கு எடுபிடியாக செயல்பட்டு வருகிறது. இதை சொன்னால் அவர் கோபப்படுகிறார். அதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். ‘நீட்‘ தேர்வு. இந்த தேர்வு கருணாநிதி ஆட்சி காலத்தில் மத்திய அரசு கொண்டு வர முயற்சி செய்தது. இதற்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று வைத்து இருந்தார்.
அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார். அவரும் ‘நீட்‘ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் முதல்-அமைச்சராக இருந்த வரை ‘நீட்‘ தேர்வு தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நடந்து கொண்டு இருக்கிறது. இப்போது ‘நீட்‘ தேர்வு தமிழகத்தில் நுழைந்து விட்டது. அப்படி என்றால் இது பா.ஜனதாவுக்கு அடிமை ஆட்சி இல்லையா?.
சுவிஸ் வங்கியில் நான் பணம் வைத்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதை நிரூபித்தால் நான் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார். ஏன் அரசியலை விட்டே விலக தயார் என்று கூறினேன். நிரூபிக்க முடியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி ஊரை விட்டு ஓட வேண்டும் என்று கூறினேன். நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் என்கிறார். எம்.ஜி.ஆர்., பேரறிஞர் அண்ணா, பக்தவச்சலம், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தான் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்-அமைச்சர்கள். இவர் விபத்தில் வந்த முதல்-அமைச்சர். இதை சொன்னால் அவர் என்னை பற்றி ஆவேசமாக பேசுகிறார். தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார்.
நான் மற்றொரு சவால் விடுகிறேன். எடப்பாடி பழனிசாமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரு தொகுதியில் போட்டியிடட்டும், நானும் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு அதே தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னுடன் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தயாரா?. அப்போது தெரியும் மக்களின் முதல்-அமைச்சர் யார் என்று.
தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சி இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது. கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சி செய்த அ.தி.மு.க. இந்த திட்டத்தில் அக்கறை செலுத்தவில்லை.
ஆனால் நாங்குநேரி தொகுதி பிரசாரத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் முடியும் என்று பொய் பிரசாரம் செய்து விட்டு செல்கிறார். அதேபோல் ஏர்வாடி பகுதியில் பிரசாரம் செய்தபோது முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து வாக்களித்தோம் என்று பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், முத்தலாக் தடை சட்டத்தை ஆதரித்து பேசினார். இதே சட்டம் மாநிலங்களவையில் விவாதத்திற்கு வந்தபோது அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் எம்.பி. எதிர்த்து பேசுகிறார். இந்த சட்டத்தில் அ.தி.மு.க.வினர் இரட்டை வேடம் போடுகிறார்கள்.
குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அதற்கு முன்னோட்டமாக நாங்குநேரி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து கை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் வேட்பாளர் ரூபி மனோகரன், ஞானதிரவியம் எம்.பி., நாங்குநேரி தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் ஐ.பெரியசாமி, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, நாங்குநேரி ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு, நெல்லை கிழக்கு மாவட்ட சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story