பெங்களூருவில் பயங்கரம் ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் படுகொலை


பெங்களூருவில் பயங்கரம் ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் படுகொலை
x
தினத்தந்தி 16 Oct 2019 11:30 PM GMT (Updated: 16 Oct 2019 10:25 PM GMT)

பெங்களூருவில், ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தரை படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு ஆர்.டி.நகர் 17-வது கிராசில் வசித்து வந்தவர் அய்யப்பா துரே (வயது 53). இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சந்தாபுரா அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் தினமும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நடைப்பயிற்சி செய்துவிட்டு வீட்டில் வந்து தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு அய்யப்பா துரே தனது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார். அதன்பிறகு அவர் தனது வீட்டை சுற்றியுள்ள பகுதியில் நடைப்பயிற்சி சென்றார். நீண்டநேரம் ஆனபோதிலும் அவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலையில் கண்விழித்த அவருடைய மனைவி பாவனா தனது கணவர் அய்யப்பா துரே வீட்டுக்கு வரவில்லை என்பதை அறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அய்யப்பா துரேயை தேட தொடங்கினார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள எச்.எம்.டி. மைதானத்தில் அய்யப்பா துரே ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பார்த்தனர். இதுகுறித்து அறிந்து அங்கு சென்ற பாவனா கணவர் அய்யப்பா துரேயின் உடலை பார்த்து கதறி அழுதார். அத்துடன் ஆர்.டி.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அய்யப்பா துரேயின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவரை அரிவாளால் வெட்டியும், கூரிய ஆயுதங்களால் குத்தியும் மர்மநபர்கள் படுகொலை செய்தது தெரியவந்தது.

மேலும் சம்பவ இடத்தில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சசிக்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இருப்பினும் கொலைக்கான காரணம் தெரியவில்லை.

அதன்பிறகு பாஸ்கர்ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இரவில் நடைப்பயிற்சி செய்த அய்யப்பா துரேவை மர்மநபர்கள் கொலை செய்துள்ளனர். அவர் துணை வேந்தராக இருந்த பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பாக அவருக்கும், இன்னொரு தரப்புக்கும் பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். கொலை செய்த மர்மநபர்களை கைது செய்ய 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் அவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்‘ என்றார்.

மேலும் துணை வேந்தர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அய்யப்பா துரே ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டார். லிங்காயத் தனிமத அங்கீகாரம் போராட்டத்திலும் கலந்து கொண்டார். ‘ஜனசாமான்யா‘ கட்சியை தொடங்கிய அவர் கடந்த சட்டசபை தேர்தலில் முத்தேபீகால் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுதவிர அவர் துணை வேந்தராக இருந்த பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் தொடர்பாகவும் பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதன் காரணமாக அனைத்து கோணங்களிலும் தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து ஆர்.டி.நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஆர்.டி.நகரில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Next Story