திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.19 லட்சம் கொடுத்த கொள்ளையன் முருகன்


திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.19 லட்சம் கொடுத்த கொள்ளையன் முருகன்
x
தினத்தந்தி 18 Oct 2019 4:45 AM IST (Updated: 18 Oct 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு விசாரணையின்போது, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.19 லட்சத்தை பிரபல கொள்ளையன் முருகன் கொடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிரபல நடிகையிடம் விசாரிக்க பெங்களூரு போலீசார் சென்னை விரைந்தனர்.

திருச்சி,

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை சுவரில் துளை போட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் முருகனின் கூட்டாளி மணிகண்டனும், அக்காள் மகன் சுரேசும் மோட்டார் சைக்கிளில் 4.8 கிலோ நகையை எடுத்து சென்றபோது திருவாரூர் போலீசில் மணிகண்டன் சிக்கினார். தப்பி ஓடிய சுரே‌‌ஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் கடந்த 10-ந் தேதி சரண் அடைந்தார். அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள்(11-ந் தேதி) பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பிரபல கொள்ளையன் முருகன் சரண் அடைந்தார்.

போலீசார் பிடியில் முருகனின் கூட்டாளியான கணேசன், நகைகளை விற்று கொடுக்க உதவியாக இருந்த ராதாகிரு‌‌ஷ்ணன், சுரேசின் தாயார் கனகவள்ளி என இதுவரை 6 பேர் சிக்கி உள்ளனர். இந்த கொள்ளை கும்பலுக்கு ஆந்திரா, கர்நாடகா, சென்னை ஆகிய இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்திலும் தொடர்பு உள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதம் திருச்சி புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கிலும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து திருச்சி மாநகர போலீசாருடன் இணைந்து மாவட்ட போலீசாரும் இரு கொள்ளை வழக்கிலும் புலனாய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்த சுரேசை திருச்சி கோட்டை போலீசார் கடந்த 14-ந் தேதி முதல் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். போலீசார் விசாரணையில், சுரே‌‌ஷ் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களை தெரிவித்து வருகிறார். 3-வது நாள் விசாரணையின்போது, சினிமா படம் எடுப்பதற்காக கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வதற்கு கால்‌ஷீட் கேட்கபோன இடத்தில் பிரபல தமிழ் நடிகைக்கு கொள்ளையன் முருகன் தங்கநகைகளை பரிசாக வழங்கியதாகவும், மேலும் பல நடிகைகளுடன் முருகனும், தானும்(சுரே‌‌ஷ்) உல்லாசமாக இருந்ததாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

4-வது நாளான நேற்றைய விசாரணையின்போது, சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொள்ளையடித்த பணத்தில் ரூ.19 லட்சம் வரை கொடுத்ததாகவும் புதிய தகவலை சுரே‌‌ஷ் வெளியிட்டு உள்ளார். இது தனிப்படை போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருச்சி நெ.1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் சுவரில் துளையிட்டு கொள்ளையடித்த 450 பவுன் நகையை மதுரையில் உருக்கி தங்கக்கட்டிகளாக விற்றோம். சென்னை மாநகரில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், அவ்வப்போது சுரேசின் மாமா முருகனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். எனவே, முருகன் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.19 லட்சம் கொடுத்திருப்பதாக சுரே‌‌ஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

கொள்ளை சம்பவத்தின்போது செல்போன் பயன்படுத்தினால், சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்டுபிடித்து விடக்கூடும் என்பதால் செல்போன்மூலம் வாக்கி டாக்கியில் இணைப்பு ஏற்படுத்தி அதை பயன்படுத்தியதாகவும், சென்னையில் அதுபோன்றுதான் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறி உள்ளார். ஆனால், அதையும் போலீசார் எப்படியோ கண்டுபிடித்து விட்டதால், அந்த தொழில்நுட்பத்தையும் கைவிட்டதாக சுரே‌‌ஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் சுவரில் துளை போட்டு கொள்ளையடித்தபோது, இடுப்பில் கயிறு கட்டி கொள்ளையில் ஈடுபடும் தொழில்நுட்பம் பயன்படுத்தியதாகவும், கடைக்குள் கொள்ளையில் ஈடுபடும்போது வெளியில் நிற்பவர், ஆட்கள் நடமாட்டம் இருந்தால் இடுப்பில் கட்டிய கயிற்றை இழுத்து சிக்னல் கொடுப்பார்.

2 மணி நேரத்திற்கும் மேலாக சுரேசும், முருகனும் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த நிகழ்வு அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இருவரும் முகத்தில் பொம்மை முகமூடி அணிந்தும், ஸ்வெட்டர், கையுறை அணிந்தும், இடுப்பில் கயிறு கட்டப்பட்டிருந்ததும் அந்த பதிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கர்நாடகா மற்றும் தமிழகத்தில் வழக்குகள் உள்ள இடங்களில் கொள்ளையன் முருகன் உயர் போலீஸ் அதிகாரிகளை கையில் வைத்திருந்தது சுரேசின் வாக்குமூலம் வாயிலாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே, திருவாரூர் மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முருகன் ரூ.18 லட்சம் மதிப்புள்ள கார் பரிசளித்துள்ளதும், தற்போது போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.19 லட்சம் கொடுத்ததும் அம்பலத்திற்கு வந்துள்ளது.

அதாவது, தன்மீதுள்ள வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டாலும், போலீசார் தன்னை பிடிக்க வரக்கூடாது என்பதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் போலீஸ் ஏட்டுகள் வரை பணம் மற்றும் பொருட்களை கொள்ளையன் முருகன் வாரி வழங்கிய தகவலும் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே பெங்களூரு போலீசார், கொள்ளையன் முருகனை நேற்று முன்தினம் மேலும் 8 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வாங்கி விசாரித்து வருகிறார்கள். பிரபல தமிழ் நடிகைக்கு கொள்ளையடித்த நகையை பரிசாக முருகன் வழங்கியதாகவும், பல நடிகைகளுடன் ஜாலியாக இருந்ததாகவும் வெளியான தகவலை அடுத்து, பெங்களூரு போலீசார் நேற்று மாலை முருகனை அழைத்து கொண்டு விசாரணைக்காக சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் மீண்டும் திருச்சிக்கு, பெங்களூரு போலீசார் முருகனை அழைத்து வந்து விசாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story