அரசு மணல் குவாரியில் முறைகேடு பொதுப்பணித்துறை அதிகாரியிடம் லாரி உரிமையாளர்கள் புகார் மனு


அரசு மணல் குவாரியில் முறைகேடு பொதுப்பணித்துறை அதிகாரியிடம் லாரி உரிமையாளர்கள் புகார் மனு
x
தினத்தந்தி 17 Oct 2019 11:00 PM GMT (Updated: 17 Oct 2019 7:49 PM GMT)

அரசு மணல் குவாரியில் முறைகேடு நடப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரியிடம் லாரி உரிமையாளர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

திருச்சி,

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தலைமையில் மணல் லாரி உரிமையாளர்கள் பலர் நேற்று திருச்சி மண்டல பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் இளங்கோவனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முறைகேடு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அழியாநிலை அரசு மணல் குவாரியில் இருந்து மணல் எடுத்து வந்து கோவில்வயல் அரசு மணல் விற்பனை நிலையத்தில் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மணல் குவாரியில் இருந்து விற்பனை நிலையத்திற்கு மணல் எடுத்து செல்ல ஒப்பந்தம் பெற்றவர்கள் கனரக டாரஸ் லாரிகளில் குவாரியில் இருந்து மணல் எடுத்து சென்று, அதை விற்பனை நிலையத்தில் இறக்காமல் முறைகேடாக வெளியில் விற்பனை செய்கிறார்கள்.

வாழ்வாதாரம் இழப்பு

இவ்வாறு தினமும் சுமார் 50 லோடு மணல் முறைகேடாக தனியார் கட்டுமான பணிகளுக்காக ஒரு லோடு மணல் தலா ரூ.40 ஆயிரம் வீதம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த முறைகேட்டுக்கு காவல்துறையினர், வருவாய்த்துறையினர், கனிம வளத்துறையினர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்.

இதனால் அரசு மணல் விற்பனை நிலையத்தில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்த லாரி உரிமையாளர்கள் மணல் கிடைக்காமல் லாரிகளை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தற்ெகாலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

நடவடிக்கை

அரசு மணல் குவாரி மற்றும் விற்பனை நிலையத்தில் நடைபெற்று வரும் இந்த முறைகேட்டினால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, ஆன்-லைன் மூலம் பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு மணல் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

முற்றுகை போராட்டம்

இதுகுறித்து செல்ல.ராசாமணி நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் ஒரேயொரு கோவில்வயல் அரசு மணல் விற்பனை நிலையத்திலும் முைறகேடு நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் அறிவித்தபடி விரைவில் 20 மணல் குவாரிகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளுக்கு தினமும் 35 ஆயிரம் லோடு மணல் தேவை. ஆனால் 100 லோடு மணல் மட்டும் தான் வழங்கப்படுகிறது. இதனால் கட்டுமான பணிகள் மொத்தமாக முடங்கி கிடக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் அடுத்த கட்டமாக மணல்குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்’ என்றார்.

Next Story