கரூர் மாவட்டத்தில் 434 குளங்களை தூர்வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


கரூர் மாவட்டத்தில் 434 குளங்களை தூர்வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 17 Oct 2019 11:15 PM GMT (Updated: 17 Oct 2019 8:15 PM GMT)

கரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 434 குளங்களை தூர்வாரும் பணிகள் நடக்கின்றன என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

கரூர்,

கைத்தறி நகரம் என அழைக்கப்படுகிற கரூர் தொழில் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தமிழக அளவில் முக்கிய இடம் பிடிக்கக்கூடிய நகராக உள்ளது. பெருகி வரும் நகரமயமாதலால் நாளுக்கு நாள் இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. வெளிமாவட்டங்களில் இருந்தும் பலர் இங்கு ஜவுளி ஏற்றுமதி நிறுவனம், கொசுவலை, பஸ்பாடி நிறுவனங்களுக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசானது கரூர் மக்களுக்காகவும், வணிகர்களுக்காகவும், தொழில் நிறுவனங்களுக்காகவும், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்காகவும் எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்த மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. அதிலும் மக்களின் தேவைக்கான குடிநீர், விவசாய தேவைகளுக்கான தண்ணீர் எளிதில் கிடைக்கும் பொருட்டு குடிமராமத்து திட்டத்தின்கீழ் 434 குளங்களை தூர்வாரும் பணி, குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1,152 வீடுகள் கட்டப்படுகின்றன

ரூ.295 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் கரூர் நகரத்தின் மையப்பகுதியில் 800 படுக்கைகள் மற்றும் 150 மாணவ - மாணவிகள் பயிலக்கூடிய வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ரூ.500 கோடி மதிப்பீட்டில் புஞ்சை புகளூர் பகுதியில் காவிரியில் புதிய கதவணை அமைக்கும் பணி, ரூ.13 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் குளத்துபாளையம், பசுபதிபாளையம் ஆகிய இரண்டு இடங்களில் புதிய குகை வழி பாலங்கள், ரூ.12 கோடி மதிப்பீட்டில் ஐந்து ரோடு, பசுபதிபாளையம் இடையே அமராவதி ஆற்றில் உயர்மட்ட பாலம், சாலை பாதுகாப்பு நிதியில் விபத்துகளை தடுக்க உயர்கோபுர மின்விளக்கு அமைத்தல், ரூ.76. கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செல்லாண்டிபாளையம், சணப்பிரட்டி, புலியூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு இடங்களில் 1,152 வீடுகள் கட்டப்படுவது உள்ளிட்டவை கரூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மனக்கணக்கு பொய்கணக்காகும்

இதைத்தவிர தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடக்கும் 8 இடங்களில் உயர்மட்ட பாலம் ஏற்படுத்துதல், கரூர் நகரில் புதிய விசைத்தறி பூங்கா அமைப்பது, கரூர்-வாங்கல், கரூர்-வெள்ளியணை, கரூர்-புலியூர் ஆகிய மூன்று சாலைகளை விரிவுபடுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இவ்வாறாக மக்கள் பணியில் 48-வது ஆண்டாக அ.தி.மு.க. அடியெடுத்து வைக்கிறது. இன்னும் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் இன்னும் பல ஆண்டுகள் இந்த பணி தொடரும். ஆட்சியை கவிழ்த்து விடலாம் என சிலர் மனக்கணக்கு போடுகின்றனர். அவற்றையெல்லாம் பொய்கணக்காக்கி வருகிற இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் அசுர பலத்துடன் அ.தி.மு.க. வெற்றி நடைபோடுவது உறுதியாகும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Next Story