நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை எதிரொலி: வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 144 மெகாவாட் நீர்மின் உற்பத்தி தொடங்கியது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம், வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், மேகமலை, உடங்கல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இந்த பலத்த மழையினால் வைகை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒரே நாள் இரவில் 120 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
இந்த நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியுள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்றுக்காலை 6 மணிக்கு 60.60 அடியாக இருந்தது. அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்காக வினாடிக்கு ஆயிரத்து 190 கனஅடி தண்ணீரும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நேற்று முதல் வினாடிக்கு 2 ஆயிரத்து 30 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்ட போதும், பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது. வைகை அணைக்கு நேற்று காலை 6 மணிக்கு 2,048 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 4 மணிக்கு 3,040 கனஅடியாக அதிகரித்து இருந்தது. இதேபோல காலை 6 மணிக்கு 60.60 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மாலை 4 மணிக்கு 60.83 அடியாக உயர்ந்து காணப்பட்டது.
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணை விரைவில் முழுக்கொள்ளளவு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள 69 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைகை அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால், வைகை அணையில் செயல்படும் நுண்புனல் நீர்மின்நிலையத்தில் உள்ள 2 அலகுகளிலும் மின்சார உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2 அலகுகளில் இருந்தும் நேற்று முதல் உச்சக்கட்ட மின்சார உற்பத்தியான 144 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.
Related Tags :
Next Story