ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக, ராணுவவீரர் மனைவியிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த பெண் கைது


ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக, ராணுவவீரர் மனைவியிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த பெண் கைது
x
தினத்தந்தி 18 Oct 2019 10:15 PM GMT (Updated: 18 Oct 2019 2:10 PM GMT)

போடியில், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி முன்னாள் ராணுவவீரர் மனைவியிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

போடி,

போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்தவர் சந்திரசேகரன். முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 7 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சந்திரா (51) கணவரின் ராணுவ ஓய்வூதிய பணத்தை பெற்று வருகிறார். இவர் ஒய்வூதிய பணத்தை எடுப்பதற்காக கடந்த 16-ந்தேதி போடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அங்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க தெரியாமல் நின்றிருந்தபோது, ஒரு பெண் தான் பணம் எடுத்து தருவதாக சந்திராவிடம் கூறியுள்ளார்.

உடனே சந்திரா ஏ.டி.எம். கார்டை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு, ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்துள்ளார். ஏ.டி.எம். எந்திரத்தில் சந்திரா கொடுத்த கார்டை பயன்படுத்திய அந்த பெண் இந்த கார்டுக்கு பணம் வரவில்லை என்றும், வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பாருங்கள் என்றும் கூறியுள்ளார். எனவே சந்திரா வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்தபோது அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என காண்பித்தது. மேலும் சந்திராவின் செல்போன் எண்ணுக்கு, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20 ஆயிரம் பணம் எடுத்துள்ளதாக குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.)வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரா முதலில் சென்ற ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அந்த பெண் மாயமாகியிருந்தது தெரிந்தது. எனவே அவர் இதுகுறித்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் போடி பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒரு பெண்ணை சந்திரா தனது உறவினர் உதவியுடன் பிடித்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் அந்த பெண் புதுக்கோட்டை ஈ.வெ.ரா.நகரை சேர்ந்த ராமர் மனைவி சீதாலட்சுமி (40) என்பதும், சந்திராவிடம் ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்ததும், இதேபோல் அவர் பல ஊர்களில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து சிறைக்கு சென்று வந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சீதாலட்சுமியை கைது செய்தனர்.

Next Story