ஜெயலலிதா மரணம்: “விசாரணை ஆணையம் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாதது ஏன்?” - உதயநிதி ஸ்டாலின் கேள்வி
“ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாதது ஏன்?“ என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
நெல்லை,
நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொகுதிக்கு உட்பட்ட சிறுமளஞ்சி கிராமத்தில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
நான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட ஞானதிரவியத்திற்கு ஓட்டு கேட்டு இங்கு வந்தேன். அப்போது தி.மு.க.வின் சாதனைகளை எடுத்து கூறினேன். அதை கேட்டு நீங்கள் ஞானதிரவியத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்து உள்ளர்கள். இதற்காக முதலில் நான் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாங்குநேரி தொகுதியில் வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், மக்கள் எழுச்சி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளது. இந்த எழுச்சியை பார்க்கின்ற போது காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனின் வெற்றி உறுதியாகிவிட்டது.
தமிழ்நாட்டில் முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஆனால் அவரை மக்கள் எடுபிடி பழனிசாமி என்று அழைக்கிறார்கள். ஏன் அவரை அப்படி அழைக்கிறார்கள் என்றால், அவர் தற்போது எல்லா இடங்களிலும் பேசும்போது, நான் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் என்று கூறுகிறார். அவர் 2016-ம் ஆண்டு தேர்தலில் என்னை முதல்-அமைச்சராக்குங்கள் என்று கூறி வாக்குக்கேட்டாரா? இல்லை. அப்போது ஜெயலலிதாவிற்கு தான் வாக்கு கேட்டார்கள். அவர் மறைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சரானார். அவர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தர்ம யுத்தம் நடத்தினார். இதையடுத்து சசிகலாவின் காலை பிடித்து எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனார். இதனால் தான் எடுபிடி பழனிசாமி என்று அழைக்கிறார்கள். இந்த எடப்பாடி பழனிசாமியின் அரசு செயல்படாத அரசாகவே உள்ளது. இந்த ஆட்சியில் தமிழகத்திற்கு தேவையான எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை.
கடந்த 8 ஆண்டுகளாக அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்து இருக்கிறார்கள். விலைவாசி உயர்வு 200 மடங்கு உயர்ந்து உள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. பெண்கள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து உள்ளது. இது தான் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள்.
இந்த ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் அல்ல. இருந்தாலும் இந்த ஆட்சியில் நடக்கின்ற அவலங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற தேர்தல் ஆகும். மக்கள் இந்த ஆட்சியின் மீது வெறுப்பில் உள்ளதை எடுத்துக்காட்டக்கூடிய தேர்தலாகும். இந்த தேர்தலில் தோல்வியை பார்த்து ஆளும்கட்சியினர் திருந்த வேண்டும். அந்த அளவிற்கு அவர்களுக்கு நீங்கள் படுதோல்வியை கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஜெயலலிதா இறந்தபோது அழுது கொண்டே பதவி ஏற்றவர்கள், மறுமுறை பதவி ஏற்கும்போது ஒருவரும் அழவில்லை. அனைவரும் நடித்து உள்ளனர். இதற்கெல்லாம் சரியான தண்டனை வழங்க வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தக்கூடிய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜராகாதது ஏன்? இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். ஏன் என்றால் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நிச்சயம் அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இதனால் தான் அவர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகாமல் இழுத்தடிக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளிக்கொண்டு வரப்படும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து மாலையில் உதயநிதி ஸ்டாலின், மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, பரப்பாடி ஆகிய ஊர்களுக்கு திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.
இதில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் ஐ.பெரியசாமி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மதுரை மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story