சேந்தமங்கலம் அருகே, பால் பண்ணையில் லாக்கரை திருடிய 3 பேர் கைது
சேந்தமங்கலம் அருகே, பால் பண்ணையில் லாக்கரை திருடிய சம்பவத்தில் 8 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேந்தமங்கலம்,
சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்யும் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் 8 மாதங்களுக்கு முன்பு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர் அறையின் கதவை உடைத்து லாக்கரை திருடி சென்று பின்பு பால் பண்ணையின் நுழைவு வாயில் முன்பாக வீசி சென்று விட்டனர்.
இது சம்பந்தமாக பால் பண்ணை நிர்வாகத்தினர் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில் சேந்தமங்கலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பால் பண்ணையில் லாக்கரை திருடியவர்கள் என்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து போலீசார் கரூரை சேர்ந்த சரத்குமார் (வயது 30), சேந்தமங்கலம் அருகே உள்ள கோனானூரை சேர்ந்த ராமதுரை (29), திருப்பூரை சேர்ந்த விக்னேஷ் (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாக்கரை திருடிய சம்பவத்தில் அவர்கள் 8 மாதங்களுக்கு பிறகு பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story