வேலூரில் காவல்துறை சார்பில் மினி மாரத்தான் - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
பணியின்போது மரணமடைந்த போலீசாரின் நினைவாக நேற்று வேலூரில் காவல்துறை சார்பில் மினி மாரத்தான் நடந்தது. இதில் போலீசார் கலந்துகொண்டு ஓடினர்.
வேலூர்,
பணியின் போது மரணமடைந்த போலீசாருக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை) நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
வேலூரில் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று வேலூரில் காவல்துறை சார்பில் போலீசாருக்கான மினி மாரத்தான் நடத்தப்பட்டது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மினி மாரத்தான் நடந்தது.
சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய மினி மாரத்தானை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்துகொண்டு அங்கிருந்து சர்வீஸ் ரோடு, கிரீன் சர்க்கிள், காட்பாடி ரோடு, மக்கான் சந்திப்பு, பழைய பஸ்நிலையம், தெற்கு போலீஸ் நிலையம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், தீயணைப்பு நிலையம் வழியாக 5 கிலோமீட்டர் தூரம் சென்று நேதாஜி விளையாட்டு அரங்கத்தை அடைந்தனர்.
இதில் ஆண்கள் பிரிவில் நிஷாந்த் முதலிடமும், ராமு 2-வது இடமும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் யுவராணி முதலிடமும், காமாட்சி 2-வது இடமும் பிடித்தனர். அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கி பாராட்டினார்.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் துரைபாண்டியன், சச்சிதானந்தம், பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் அசோகன், நாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story