6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் - விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
காட்பாடி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
வேலூர்,
காட்பாடியை அடுத்த சேவூர் ராமர்கோவில் தெருவை சேர்ந்த தன்ராஜ் மகன் விஜயகுமார் (வயது 25), சுமை தூக்கும் தொழிலாளி. இவர், கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை மிட்டாய் மற்றும் இனிப்பு வாங்கி தருவதாக யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்றுள்ளார். விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
இதற்கிடையே சிறுமி அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து அழுதுகொண்டே வெளியே வந்தாள். இதுகுறித்து பெற்றோர், சிறுமியிடம் கேட்டனர். அதற்கு சிறுமி மிட்டாய், இனிப்பு வாங்கி தருவதாக கூறி விஜயகுமார் பாழடைந்த வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தாள்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விஜயகுமாரை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிபிரியா ஆஜரானார்.
விசாரணையின் முடிவில் நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த விஜயகுமாருக்கு ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்தார். அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்ட விதியின் கீழ் சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடாக மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். இந்த இழப்பீடு தொகை சிறுமி 18 வயது நிரம்பும் வரை அவரின் பெயரில் டெபாசிட் செய்து வைக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
அதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் காவலுடன் விஜயகுமார் வேனில் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story