திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது - 27 பவுன் நகைகள் மீட்பு
திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
குள்ளனம்பட்டி,
திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு மர்மநபர்கள் திருடி சென்றனர். மேலும் வழிப்பறி சம்பவங்களும் அரங்கேறி வந்தன. இதையடுத்து திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், பரமேஸ்வரன் ஆகியோர் நேற்று முன்தினம் தோமையார்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் சின்னாளப்பட்டி அருகே உள்ள ஜே.புதுக்கோட்டையை சேர்ந்த சிவக்குமார் (வயது 26 ), கன்னிவாடியை சேர்ந்த அருண்ராஜ்குமார் (26) என்பதும் தெரியவந்தது.
மேலும் 2 பேரும் சேர்ந்து திண்டுக்கல் புறநகர், சின்னாளபட்டி, அம்பாத்துரை, தாடிக்கொம்பு பகுதிகளில் வீடுகளில் புகுந்து நகைகள் திருடி வந்ததும், வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் அவர்கள் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story