மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 21 Oct 2019 10:00 PM GMT (Updated: 21 Oct 2019 5:41 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அருவியில் குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

தளி, 

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளை நீராதாரமாக கொண்ட இந்த அருவிக்கு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழைகாலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது.

அதற்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டைஆறு, உழுவிஆறு, பாராப்பட்டிஆறு, வண்டிஆறு உள்ளிட்ட ஆறுகள் உதவி புரிந்து வருகின்றன. பஞ்சலிங்க அருவியின் இயற்கை சூழலை ரசிக்கவும் அதில் குளித்து மகிழவும் தினந்தோறும் ஏராளமான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றனர். மேலும் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருகின்ற வழியில் திருமூர்த்திஅணை, சிறுவர்பூங்கா, வண்ணமீன் காட்சியகம், படகு இல்லம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் அமைந்துள்ளன. இதனால் உடுமலை பகுதியில் திருமூர்த்திமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல்மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது நீர்வரத்து கூடுவதும் குறைவதுமாக இருந்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பலத்தமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

அந்த தண்ணீர் அடிவாரப்பகுதியில் உள்ள கன்னிமார் கோவிலை தழுவியவாறு திருமூர்த்திஅணையை அடைந்தது. மேலும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் நேற்றும் தடை விதித்தது.

இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அருவியின் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Next Story