அ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


அ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2019 4:15 AM IST (Updated: 21 Oct 2019 11:36 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி நாங்குநேரி அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இட்டமொழி, 

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. வாக்குப்பதிவு நடந்தபோது தொகுதிக்குள் வந்த வசந்தகுமார் எம்.பி.யை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர். இதனால் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதே நேரத்தில் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியில் உள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்துக்கு அந்த கட்சியை சேர்ந்த விஜிலா சத்யானந்த் எம்.பி. வந்திருந்தார்.

இதை அறிந்த காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைத்தலைவர் வக்கீல் பால்ராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். சிலர் சாலையில் படுத்து கிடந்து கோஷம் எழுப்பி னர்.

வசந்தகுமார் எம்.பி.யை கைது செய்தது போல், விஜிலா சத்யானந்த் எம்.பி. மீதும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்றும், விஜிலா சத்யானந்த் எம்.பி. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் கிடைத்து தாங்கள் வந்ததாகவும், எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விஜிலா சத்யானந்த் எம்.பி.யை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story