சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது மராட்டியத்தில் 60 சதவீத வாக்குப்பதிவு 24-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை


சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது மராட்டியத்தில் 60 சதவீத வாக்குப்பதிவு 24-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2019 6:30 AM IST (Updated: 22 Oct 2019 6:30 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தல் 60.46 சதவீத வாக்குப்பதிவுடன் அமைதியாக நடந்து முடிந்தது. 24-ந் தேதி (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி, பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி நேரடி போட்டியில் உள்ளன.

இதுதவிர ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் எம்.ஐ.எம். கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளன.

மொத்தம் 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் (நாக்பூர் தென்மேற்கு), காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான் (போகர்), பிரிதிவிராஜ் சவான் (காரட்), மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் (சங்கம்னேர்), தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் (பாராமதி), யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே (மும்பை ஒர்லி), மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் (கோத்ருட்) ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.

சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 8 கோடியே 98 லட்சத்து 39 ஆயிரத்து 600 வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 96 ஆயிரத்து 661 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்தல் பணியில் 6 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பாதுகாப்புக்காக 3 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நக்சலைட்டு பாதித்த மாவட்டங்களான கட்சிரோலி, கோண்டியாவில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. மரத்வாடா பகுதியில் உள்ள மாவட்டங்களில் காலையில் பலத்த மழை பெய்ததால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் காலை 8 மணி வரை 5.4 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன. ஆரம்பத்தில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தாலும் நேரம் செல்ல செல்ல ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது.

அரசியல் கட்சி தலைவர்களும், இந்தி சினிமா நட்சத்திரங்களும் காலையிலேயே வந்து வாக்களிக்க ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் தனது சொந்த ஊரான நாக்பூரில் குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார். இதேபோல முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின்கட்காரி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் நாக்பூரில் வாக்களித்தனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது மருமகன் சதானந்த் சுலே, பேத்தி ரேவதி சுலே ஆகியோருடன் தென்மும்பையில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று ஓட்டு போட்டார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது மனைவி ராஷ்மி தாக்கரே, மூத்த மகனும், ஒர்லி தொகுதி சிவசேனா வேட்பாளருமான ஆதித்ய தாக்கரே, இளைய மகன் தேஜஸ் தாக்கரே ஆகியோருடன் பாந்திரா கிழக்கு காந்தி நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் தனது தொகுதியான சங்கம்னேரிலும், முன்னாள் முதல்-மந்திரியும், சிவசேனா மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி மும்பை தாதரிலும், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே தாதர் சிவாஜி பார்க்கிலும், வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் அகோலாவிலும் வாக்களித்தனர்.

மும்பை குடிசைப்பகுதிகளில் வாக்குப்பதிவு களை கட்டியிருந்தது. குடிசைப்பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிகளவில் வந்து வாக்களித்தனர்.

மாநிலம் முழுவதும் மதியம் 1 மணி வரை 30.89 சதவீதமும், பிற்பகல் 3 மணிவரை 43.78 சதவீதமும் வாக்குகள் பதிவானது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், 60.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

அமராவதி மாவட்டத்தில் சுவாபிமானி கட்சி வேட்பாளர் தேவேந்தி புயர் நேற்று அதிகாலை காரில் சென்று கொண்டு இருந்தபோது, முகமூடி அணிந்த 3 பேர் கும்பல் அவரது காரை வழிமறித்தது. வேட்பாளரை கீழே தள்ளி அடித்து உதைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் அந்த கும்பல் காருக்கு தீ வைத்து சென்றது.

நாந்தெட் மாவட்டத்தில் காரில் சென்ற வஞ்சித் பகுஜன் அகாடி வேட்பாளர் மீது மர்ம ஆசாமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வேட்பாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் சில இடங்களில் சிறு, சிறு மோதல்கள் நடந்தன.

மற்றபடி பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

Next Story