விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: காட்டாற்று வெள்ளம் சாலையை மூழ்கடித்ததால் பர்கூர் மலைக்கிராமங்களில் போக்குவரத்து பாதிப்பு


விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை: காட்டாற்று வெள்ளம் சாலையை மூழ்கடித்ததால் பர்கூர் மலைக்கிராமங்களில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2019 4:00 AM IST (Updated: 22 Oct 2019 9:54 PM IST)
t-max-icont-min-icon

விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. காட்டாற்று வெள்ளம் சாலையை மூழ்கடித்ததால், பர்கூர் மலை கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பாறையில் திடீர்அருவிகள் உருவாகி உள்ளன. கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் காய்ந்து கிடந்த குளம், குட்டைகள் நிரம்பிவிட்டன. தடுப்பணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகின்றன.

மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணை 100 அடியை தாண்டிவிட்டதால், அணையில் இருந்து உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவும் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது.

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள பர்கூர், தாமரைக்கரை, தாளக்கரை, ஈரெட்டி, வெள்ளிமலை, மடம், தேவர்மலை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாைல 4 மணி வரை விடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் பர்கூர் பகுதியில் உள்ள அனைத்து காட்டாறுகளிலும் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது. ஈரெட்டி அருகே ரோட்டை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது தாமரைக்கரையில் இருந்து தேவர்மலைக்கு 2 அரசு பஸ்கள் நாள்தோறும் 10 முறை சென்று வரும் தற்போது ரோடே தெரியாத அளவும் காட்டாறு செல்வதால் போக்குவரத்து நடைபெறவில்லை.

இதேபோல் ஈரெட்டி கிராமம் அருகே மலைப்பாதை ஓரம் காட்டாறுகள் பாய்ந்து வரும் இடங்களில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளன. மரக்கிளைகளை உடைத்துக்கொண்டு அருவிகளில் தண்ணீர் பாய்கிறது.

அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் திடீர் அருவிகளை செல்போன்களில் படம் பிடித்தார்கள். சிலர் ஆபத்தை உணராமல் செல்பியும் எடுத்துக்கொண்டார்கள்.

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை கடந்த மாதம் காய்ந்து கிடந்தது. இந்தநிைலயில் பர்கூர் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் வரட்டுப்பள்ளம் அணை தன் முழுக்கொள்ளளவான 33½ அடியை தாண்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி கெட்டிசமுத்திரம் ஏரிக்கு செல்கிறது. இதேபோல் எண்ணமங்கலம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலமாகும். ஆனால் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒரு வாரமாகவே தடுப்பணையில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது. தடுப்பணையே தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோபியில் பெய்த பலத்த மழை காரணமாக கொடிவேரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

பவானிசாகர் அணை 100 அடியை தாண்டிவிட்டது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிக அளவு உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால் பவானி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சத்தியில் வரசித்தி விநாயகர் கோவில் படித்துறையை மூழ்கியபடி வெள்ளம் செல்கிறது. இதேபோல் ரங்கசமுத்திரம் பகுதியில் கரைேயார வீடுகளை நெருங்கியபடி ஆற்று வெள்ளம் செல்கிறது.

தாளவாடி மற்றும் ஆசனூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குளம் குட்டைகள் நிரம்பி வழிகிறது. ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆசனூர் சுற்றுவட்டார வனப்பகுதியிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால் ஆசனூர் அருகே உள்ள ஓங்கல்வாடி பகுதியில் 18 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளத்துக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. குளத்தின் கரைகள் பலவீனமாக இருப்பது அதிகாரிகளால் கண்டறியப்பட்டு உள்ளது. கரை உடைந்தால் அருகே உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி குளத்தின் மேடான பகுதியில் உள்ள கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதேபோல், டி.என்.பாளையம், நம்பியூர், சென்னிமலை, கொடுமுடி, ஊஞ்சலூர், பவானி பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது.

Next Story