உள்ளாட்சி தேர்தல்: ஜனதா தளம்(எஸ்) தனித்து போட்டி தேவேகவுடா அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தல்: ஜனதா தளம்(எஸ்) தனித்து போட்டி தேவேகவுடா அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2019 10:30 PM GMT (Updated: 22 Oct 2019 4:58 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) தனித்து போட்டியிடும் என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு, 

உள்ளாட்சி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) தனித்து போட்டியிடும் என்று தேவேகவுடா கூறினார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தனித்து போட்டி

2 மாநகராட்சிகள் உள்பட 14 உள்ளாட்சி அமைப்புகளில் 418 வார்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மங்களூரு மாநகராட்சியில் நாங்கள் அனைத்து வார்டுகளில் போட்டியிடுவோம். 4 இடங்கள் வரை எங்கள் கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து எங்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன்.

மங்களூருவில் நானே சென்று பிரசாரம் செய்ய உள்ளேன். நான் அங்கு அதிகமாக செல்லாமல் இருப்பதால், எங்கள் கட்சி சற்று பின்னடைவை சந்திக்கிறது. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் அனைத்து இடங்களிலும் ஜனதா தளம்(எஸ்) போட்டியிடும். தாவணகெரேயில் எங்கள் கட்சிக்கு முழுமையான பலம் உள்ளது என்று சொல்ல மாட்டேன். உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) தனித்து போட்டியிடுகிறது. வேறு எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை.

போலீசார் தொல்லை

யாதகிரியில் எங்கள் கட்சி தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். முதல்-மந்திரியின் காரை முற்றுகையிட்ட காரணத்தால் அவர்களுக்கு போலீசார் தொல்லை கொடுத்து வருகிறார்கள். இதை கண்டித்து எங்கள் கட்சியினர் யாதகிரியில் போராட்டம் நடத்துகிறார்கள். அதில் நானும் பங்கேற்பேன்.

எங்கள் கட்சியினர் தாக்கப்பட்டால் அவர்களுக்கு ஆதரவாக நான் களத்தில் நிற்பேன். எங்கள் கட்சி தொண்டர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் போலீஸ் அதிகாரியுடன் பேசினேன். தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். ஆனால் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலிடத்தில் இருந்து அந்த அதிகாரிக்கு அழுத்தம் வந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story