பாலாறு கிராமத்திலுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கியாஸ் வெளியேற்றம்? மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்


பாலாறு கிராமத்திலுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கியாஸ் வெளியேற்றம்? மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 22 Oct 2019 11:15 PM GMT (Updated: 22 Oct 2019 5:48 PM GMT)

பழனி அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஒரு விதமான கியாஸ் வெளியேறுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பழனி,

பழனி அருகே பாலாறு-பொருந்தலாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து பழனி நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக பாலாறு கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தண்ணீரை சுத்திகரிக்கப்படும்போது ஒரு விதமான கியாஸ் அடிக்கடி வெளியேறுவதால் தங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் குளோரின் கலக்கப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. தற்போது நவீன முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அவ்வாறு சுத்திகரிப்பு செய்யும்போது அடிக்கடி கியாஸ் வெளியேறுகிறது. இது சுமார் 200 மீட்டர் பரப்பளவு உள்ள பகுதிக்கு பரவுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள ஓடை மூலம் பாலாற்றில் கலக்கிறது. இந்த கழிவுநீரால் ஓடை கரையோரத்தில் இருந்த அனைத்து செடிகள், மரங்கள் கருகி வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இந்த சம்பவம் குறித்து பழனி நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பழனி நகராட்சியில் உள்ள 13 வார்டுகள், பழனி கோவில் மற்றும் சிவகிரிப்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பாலாறு கிராமத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது நவீன முறையில் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதற்காக ‘ஏர் விண்டர்’ கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து எந்தவித கியாசும் வெளியேற வாய்ப்பில்லை என்றார்.

Next Story