கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் சங்கத்தினர் கைது


கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் சங்கத்தினர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2019 11:00 PM GMT (Updated: 22 Oct 2019 6:53 PM GMT)

தஞ்சையில் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர், 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் யாதவ தெருவில் உள்ள மின்கம்பங்களும் சாய்ந்தன. இந்த பகுதிக்கு இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் தஞ்சைக்கு வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக்கொடி காட்டி நீதி கேட்கும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் மகேஸ்வரன் மற்றும் ராமதாஸ், ஜெகதீ‌‌ஷ், திலகராஜ் உள்பட 10 பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் தஞ்சை- நாஞ்சிக்கோட்டை சாலையில் நேற்று காலை காவிரி விவசாயிகள் சங்க துணை செயலாளர் வீரப்பன் தலைமையில் விவசாயிகள் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்த முயன்ற 7 பேரை கைது செய்தனர். இதே போல் தஞ்சை தாலுகா போலீசார், விவசாயிகள் 2 பேரை கைது செய்தனர். இது குறித்து பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:- போராட்டம் நடத்த முயன்ற 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மின் இணைப்பு வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story