தொழில் நிறுவனத்துக்கு சான்றிதழ் கொடுக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய உதவி வணிகவரி அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில்
தொழில் நிறுவனத்துக்கு சான்றிதழ் கொடுக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய உதவி வணிகவரி அதிகாரிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் நேசமணிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் புதிதாக தொழில் நிறுவனம் தொடங்க திட்டமிட்டார். இதைத் தொடர்ந்து ெதாழில் நிறுவனத்துக்கு வணிகவரி தொடர்பான சான்றிதழ் பெற நாகர்கோவிலில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு வணிகவரித்துறை அதிகாரி செல்வராஜ் மற்றும் உதவி வணிகவரி அதிகாரியான சிவகாசிைய சேர்ந்த சுப்புராமன் (வயது 41) ஆகியோரை சந்தித்து சான்றிதழ் தொடர்பாக பேசினார். அப்போது சான்றிதழ் வழங்க வணிக வரித்துறை அதிகாரி ரூ.2 ஆயிரமும், உதவி அதிகாரி ஆயிரம் ரூபாயும் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதுபற்றி நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராஜேந்திரன் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்சம் கேட்ட 2 அதிகாரிகளையும் கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.
அதன்பேரில் கடந்த 23-6-2010 அன்று வணிகவரித்துறை அதிகாரி செல்வராஜ் மற்றும் உதவி அதிகாரி சுப்புராமன் ஆகியோர் கேட்ட லஞ்ச பணத்தை ராஜேந்திரன் கொடுத்துள்ளார். இதை மறைவாக இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு ேபாலீசார் அதிரடியாக சென்று 2 பேரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி அருணாசலம் விசாரித்து வந்தார். வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோதே செல்வராஜ் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சுப்புராமனுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அருணாசலம் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story