பாம்பனில் 183 மில்லி மீட்டர் பதிவு: ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டிய மழை


பாம்பனில் 183 மில்லி மீட்டர் பதிவு: ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டிய மழை
x
தினத்தந்தி 23 Oct 2019 4:15 AM IST (Updated: 23 Oct 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் தொடங்கி விடிய, விடிய கனமழை கொட்டியது. இதனால் பள்ளிகளுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. ராமநாதபுரம் போக்குவரத்துக்கழக பணிமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 10 பஸ்கள் சேதம் அடைந்தன.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் அதிக அளவில் மழை பதிவாகி வருகிறது. மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தொடங்கிய மழை இடைவிடாது விடிய விடிய கொட்டியது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மழையின்றி வாடி வறண்டு போய் காணப்பட்ட நீர்நிலைகளுக்கு இந்த மழையினால் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரத்தில் ஆயுதப்படை மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி, குட்டி குளம் போல் காட்சி அளித்தது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் அமைந்துள்ள ‘ஹெலிபேடு’ தளத்தில் மழைநீர் சூழ்ந்தது. ராமநாதபுரம் போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சுவரின் அருகில் நிறுத்தி வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட பஸ்களின் பின்பக்க கண்ணாடிகள் நொறுங்கி, அந்த பஸ்கள் சேதம் அடைந்தன. போக்குவரத்துக்கழக பணிமனையிலும் மழைநீர் சூழ்ந்து நின்றது.

ராமநாதபுரம் அருகே குயவன்குடி பகுதியில் பள்ளிவாசல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. எமனேசுவரம் குருநாதன் கோவில் தெருவில் வசிக்கும் துளசிராமன் மகன் முருகன்(வயது 40) என்பவரின் வீட்டுச்சுவர் விழுந்தது. இந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதாலும் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாலும் இந்த ஆண்டு விவசாயம் நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாய பணிகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை அமைக்கும்போதே, மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும், தங்கள் பகுதி தனித்தீவாக மாறிவிடும் என்றும், அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று பெய்த ஒருநாள் கனமழைக்கே அந்்த சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கி மக்கள் யாரும் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் லாந்தை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மழைநீரை உடனடியாக அகற்றக்கோரி சாலை மறியலுக்கு முயன்றனர். போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து சமாதானப்படுத்தி மழைநீரை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ராமநாதபுரம் முதல் பரமக்குடி வரை பல இடங்களில் ரெயில்வே சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது குறிப்பிடத்தக்கது.

மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

மண்டபம் - 177

ராமேசுவரம் - 165.10

பாம்பன் - 183

தங்கச்சிமடம் - 168.3

ராமநாதபுரம் - 39

திருவாடானை - 59.6

ஆர்.எஸ்.மங்கலம் - 33

தீர்த்தாண்டதானம் - 47.13

தொண்டி - 50

வட்டாணம் - 31

பள்ளமோர்குளம் - 13.5

பரமக்குடி - 63.6

முதுகுளத்தூர் - 41.2

கமுதி - 9.5

கடலாடி - 6.2

வாலிநோக்கம் - 13.8

மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 183 மில்லி மீட்டர் மழையும், மண்டபத்தில் 177 மி.மீ., ராமேசுவரத்தில் 165 மி.மீ. மழையும் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story