வலங்கைமான் அருகே, கார் திருடிய 2 பேர் கைது


வலங்கைமான் அருகே, கார் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2019 4:15 AM IST (Updated: 23 Oct 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே கார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உத்தாணி கிராமத்தில் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காவலாளியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த வீரமுத்து மகன் மணிகண்டன் (வயது 27) என்பவர் பணியில் சேர்ந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த ரெங்கன் மகன் மணிகண்டன் (29) என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கார் டிரைவராக பணியில் சேர்ந்துள்ளார்.

இருவரும் பணியிடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கி உள்ளது. இதையடுத்து ஊருக்கு சென்ற இருவரும் கடந்த 19-ந் தேதி நள்ளிரவு அவர்கள் வேலை பார்த்த உத்தாணி தொண்டு நிறுவனத்திற்கு வந்து அங்கு நிறுத்தி வைக்கப்படிருந்த காரை திருடி உள்ளனர்.

இதுகுறித்து தொண்டு நிறுவன நிர்வாகி ஆரோக்கியமேரி வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

இதில் ஜெயங்கொண்டம் அருகே ஒரு கிராமத்தில் 2 பேரும் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story