மராட்டிய சட்டசபை தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது


மராட்டிய சட்டசபை தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது
x
தினத்தந்தி 23 Oct 2019 5:00 AM IST (Updated: 23 Oct 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சட்டசபை தேர்தல்

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நேற்றுமுன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 96 ஆயிரத்து 661 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குப்பதிவுக்கு 1 லட்சத்து 79 ஆயிரத்து 895 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 505 கன்ட்ரோல் யூனிட்களும் பயன்படுத்தப்பட்டன.

மேலும் முதல் முறையாக மராட்டிய சட்டசபை தேர்தலில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வி.வி.பாட் ஒப்புகை சீட்டு எந்திரங்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 21 பயன்படுத்தப்பட்டன.

இந்த தேர்தலில் 60.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குகள் பதிவான மின்னணு எந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் வைக்கப்பட்டன. அந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாளை வாக்கு எண்ணிக்கை

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. மாநிலத்தின் 288 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டு கள் எண்ணப்படும். அதை தொடர்ந்து மின்னணு வாக் குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். பல சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என யாரும் வர அனுமதி கிடையாது.

வேட்பாளர்கள், அனுமதி பெற்ற ஏஜெண்டுகள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அடையாள அட்டை வைத்துள்ள பத்திரிகையாளர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ள வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்கள் யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

வாக்கு எண்ணும் மையங்களில் மேஜைகள் போடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்று முடிவுகளையும் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story