வானவில்: மொபைல் களம்


வானவில்: மொபைல் களம்
x
தினத்தந்தி 23 Oct 2019 10:17 AM GMT (Updated: 23 Oct 2019 10:17 AM GMT)

...

ஒன் பிளஸ் 7 டி புரோ

ஆப்பிள் நிறுவனத்துக்கு இணையாக ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சீனாவின் ஒன் பிளஸ் நிறுவனத் தயாரிப்புகளில் சமீபத்திய வரவுதான் ஒன் பிளஸ்7. இதைத் தொடர்ந்து தற்போது ஒன் பிளஸ் 7 டி புரோ மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 6.67 அங்குல அமோலெட் திரையுடன் இது வந்துள்ளது.

இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவக வசதியுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.53,999. இதில் ஆண்ட்ராய்டு 10 ஆக்சிஜன் இயங்குதளம் உள்ளது. இரண்டு நானோ சிம் கார்டுகளை பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பின்புறத்தில் 48 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட 3 கேமராக்கள் உள்ளன. செல்பி பிரியர்களுக்காக முன்புறத்தில் 16 மெகா பிக்ஸெல் கொண்ட பாப்-அப் கேமரா உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 4,080 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.

மெக்லாரென் எடிஷன்

இதில் 7 டி புரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனும் சந்தைக்கு வர உள்ளது. இதன் விலை ரூ.58,999 ஆகும். 6.67 அங்குல திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போனிலும் அமோலெட் திரை உள்ளது. இதில் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் உள்ளது. 48 மெகா பிக்ஸெல்லைக் கொண்ட டியூயல் பிளாஷூடனான கேமராவைக் கொண்டுள்ளது. இரட்டை சிம் வசதி கொண்டது. முன்புறத்தில் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.

மெக்லாரென் எடிஷன் பப்பாளிப்பழ ஆரஞ்சு நிறத்தில் கிடைப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும்.

டெக்னோ கேமோன் 12

இந்திய நிறுவனமான டெக்னோ கேமோன் மூன்று கேமராக்களைக் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6.55 அங்குல திரையைக் கொண்டதாக வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 ஆகும். ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸரைக்கொண்டது. இது 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவக வசதியோடு வந்துள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளது. இதன் பின்பகுதி கண்ணாடியால் ஆனதைப் போல உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கேமரா 16 மெகா பிக்ஸெல் கொண்டது. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இரட்டை சிம் போடும் வசதியோடு வந்துள்ள இது விரல் ரேகை உணர் சென்சார் வசதி கொண்டது. இதில் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. பே புளூ, ஸ்டெல்லர் பர்பிள் ஆகிய கண்கவர் வண்ணங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது.

இன்பினிக்ஸ் எஸ்5 ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் நிறுவனம் எஸ்5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.6 அங்குல திரையோடு 32 மெகா பிக்ஸெல் கொண்ட கேமராவுடன் வந்துள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பகுதியில் 32 மெகாபிக்ஸெல் கேமராவும், பின்பகுதியில் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக பின்புற கேமராதான் அதிக பிக்ஸெல்லைக் கொண்டதாக இருக்கும்.

ஆனால் இன்பினிக்ஸ் இந்த முறையை மாற்றியுள்ளது. இரட்டை சிம் கார்டு போடும் வசதி, எஸ்.டி. கார்டு போடும் வசதி, ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தைக் கொண்டதாக இது வந்துள்ளது. விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. சியான், வயலெட் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999 ஆகும்.

நூபியா ரெட் மேஜிக் 3 எஸ்

நூபியா நிறுவனத்தின் சமீபத்திய வரவு ரெட் மேஜிக் 3 எஸ் ஸ்மார்ட்போனாகும். 6.65 அங்குல புல் ஹெச்.டி. பிளஸ் ஹெச்.டி.ஆர். அமோலெட் திரையைக் கொண்டது. இதில் ஸ்நாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,999 ஆகும். இதில் மற்றொரு வேரியன்ட்டான 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவக வசதி கொண்ட மாடலையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கேமிங் பிரியர்களுக்கென கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தமாடல் இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பின்புற கேமராக்கள் 48 மெகா பிக்ஸெல் திறனையும் முன்புற கேமராக்கள் 16 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட வையாகவும் விளங்குகின்றன.

இரட்டை சிம் வசதி மற்றும் விரல்ரேகை உணர் சென்சாருடன் இது வந்துள்ளது. 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 27 வாட் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளது.

ரெட்மி நோட் 8 புரோ

ஜியோமியின் ரெட்மி பிராண்டில் தற்போது நோட் 8 புரோ மாடல் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. இது 6.53 அங்குல புல் ஹெச்.டி. பிளஸ் மற்றும் எல்.சி.டி. திரையுடன் வந்துள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி.90டி பிராசஸர் உள்ளது. இதில் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ரெய்ன்லாண்ட் பாதுகாப்பு வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சூடேறாத வகையில் லிக்விட் கூல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் 4 முதல் 6 டிகிரி வரையில் சூடாவதைக் குறைக்க உதவுகிறது. இரட்டை சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 3 கேமராக்கள் 64 மெகா பிக்ஸெல் திறன் கொண்டவையாக உள்ளன. செல்பி பிரியர்களுக்கென 20 மெகா பிக்ஸெல் கேமராவை முன்பகுதியில் வைத்துள்ளது. விரல் ரேகை பதிவு சென்சார் மற்றும் ஐ.ஆர். சென்சாரும் உள்ளது. இதில் 6 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. ரேம் கொண்ட இரண்டு வேரியன்ட்கள் வந்து உள்ளன. இவற்றின் நினைவகம் 128 ஜி.பி.யாக உள்ளது. இதை 256 ஜி.பி. வரை விரிவுபடுத்தலாம். ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளது இதன் சிறப்பம்சமாகும். 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி 18 வாட் விரைவாக சார்ஜ் ஆகும் வசதியோடு வந்துள்ளது.

காமா கிரீன், ஹாலோ ஒயிட், ஷேடோ பிளாக் வண்ணங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம் உள்ள மாடல் விலை ரூ.14,999. 8 ஜி.பி. ரேம் உள்ள மாடல் விலை ரூ.17,999 ஆகும்.

Next Story