கருமந்துறையில் செம்மரக்கட்டை புரோக்கர்கள் 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்


கருமந்துறையில் செம்மரக்கட்டை புரோக்கர்கள் 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 24 Oct 2019 4:45 AM IST (Updated: 23 Oct 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

கருமந்துறையில், செம்மரக்கட்டைகள் வெட்ட தொழிலாளர்களை அனுப்பும் புரோக்கர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப்பகுதியில் அதிக அளவில் மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி இளைஞர்கள் பல்வேறு வேலைகளுக்கு சென்று வருமானம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப்பகுதியில் செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்துவதற்கு சேலம் மாவட்டத்தில் இருந்து கூலித்தொழிலாளர்கள் செல்வதாகவும், அந்த தொழிலாளர்களுக்கு அதிக பணம் தரப்படும் எனக்கூறி புரோக்கர்கள் அனுப்புவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இந்த புரோக்கர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசாருக்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவிட்டார். இதன்பேரில் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, கருமந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

விசாரணையில், கருமந்துறை கிளாக்காடு பகுதியை சேர்ந்த தீர்த்தன் (வயது 31), வெங்கட்டவளவு ராமர் (34), தாள் வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் (34) ஆகிய 3 பேரும் செம்மரம் வெட்டுவதற்கு ஆட்களை அனுப்பும் புரோக்கர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கருமந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கைது செய்தார்.

இதில் கைதான தீர்த்தன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்மரம் வெட்டச்சென்ற பூச்சி என்ற வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று தெரியவந்தது.

கைதான 3 பேரையும் ஆத்தூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

செம்மரக்கட்டை புரோக்கர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story