தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது நகை-பணம் பறிமுதல்


தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது நகை-பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Oct 2019 11:00 PM GMT (Updated: 23 Oct 2019 6:23 PM GMT)

குத்தாலம் அருகே தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து நகை-பணத்தை பறி முதல் செய்தனர்.

குத்தாலம்,

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே தேரழந்தூர் பெருமாள் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 65). இவர், குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது குத்தாலத்தில் இண்டேன் கியாஸ் ஏஜென்சி மற்றும் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி மாலை முத்துக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மேற்பார்வையில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, ஆத்மநாதன், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. இந்த படையினர் தீவிர புலன் விசாரணை செய்தனர். விசாரணையில், குத்தாலத்தில் முத்துக்குமாருக்கு சொந்தமாக இயங்கி வரும் சூப்பர் மார்க்கெட்டில் சுமார் 1½ மாதங்களுக்கு முன்பு வேலை செய்த குத்தாலம் அருகே வில்லியநல்லூரை சேர்ந்த முருகேசன் மகன் ராஜீவ்கண்ணன் (21) என்பவர் சம்பவத்தன்று முத்துக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

உடனே போலீசார், ராஜீவ்கண்ணனிடம் இருந்து 9 பவுன் நகை, ரூ.10 லட்சத்து 65 ஆயிரத்து 370 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ராஜீவ்கண்ணனை கைது செய்தனர். 

Next Story