சேறும், சகதியுமாக உள்ள தெருவில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்


சேறும், சகதியுமாக உள்ள தெருவில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2019 11:00 PM GMT (Updated: 23 Oct 2019 6:59 PM GMT)

சேறும், சகதியுமாக உள்ள தெருவில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பர்மாகாலனி அருகே உள்ள பாண்டியன்நகர், தொண்டைமான் நகர் ஆகிய பகுதிகள் புதுப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்டவையாகும். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டது. குழாய்கள் பதிக்கப்பட்டு மண் போட்டு குழியும் மூடப்பட்டது. ஆனால் புதிதாக தார்சாலை போடப்படவில்லை. தஞ்சையில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பாண்டியன்நகர், தொண்டைமான்நகரில் குழாய் பதிக்கப்பட்ட சில இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, மழைநீர் தேங்கியுள்ளது.

மேலும் அந்த வீதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த பகுதிகளில் குடியிருப்பவர்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் கூட சகதியில் நடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்படி நடந்து செல்லும்போது சிலர், வழுக்கி கீழே விழுந்து காயமும் அடைந்துள்ளனர். இரு சக்கர வாகனங்களில் சென்றால் பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி கொள்ளும் அவலநிலையும் உள்ளது. இதனால் புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பலனும் இல்லை.

நாற்று நட்ட பெண்கள்

இதனால் பாண்டியன்நகர், தொண்டைமான்நகரை சேர்ந்த பெண்கள் ஆவேசம் அடைந்தனர். சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் தெருவில் நாற்றுக்களை நட்டு பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த தாசில்தார் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் மற்றும் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறும்போது, யூ.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் இதே பகுதியில் உள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சீருடை அணிந்து கொண்டு சேற்றில் நடந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது. பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. எனவே புதிதாக தார்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story