தீபாவளிக்கு ஓரிரு நாளே உள்ள நிலையில் மணப்பாறை சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்


தீபாவளிக்கு ஓரிரு நாளே உள்ள நிலையில் மணப்பாறை சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 23 Oct 2019 10:30 PM GMT (Updated: 23 Oct 2019 8:04 PM GMT)

தீபாவளிக்கு இன்னும் ஓரிரு நாளே உள்ள நிலையில் மணப்பாறை சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மணப்பாறை,

புத்தாடை அணிந்து, மத்தாப்பு கொளுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்பு, காரம் செய்து குடும்பத்தோடு உண்டு, உற்றார்-உறவினர்களுக்கு அதனை பகிர்ந்து கொடுத்து கொண்டாடப்படுவதே தீபாவளி ஆகும். அன்றைய தினம் அசைவ விருந்தும் தடபுடலாக இருக்கும். ஜவுளிகள், பட்டாசுகள், இனிப்புகள் விற்பனை போன்று ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி விற்பனையும் அதிகமாக இருக்கும். இதனால், அதிகாலை முதலே மாமிச கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும்.

இதற்காக மாமிச கடை உரிமையாளர்கள் தங்களுக்கு தேவையான ஆடு, கோழி உள்ளிட்டவைகளை ஓரிரு நாளைக்கு முன்னதாகவே வாங்கி வைத்திருப்பார்கள். முன்னதாக ஆடுகளை வாங்க சந்தை நோக்கி படையெடுப்பார்கள். மணப்பாறையில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை இந்த சந்தை கூடும். அதன்படி நேற்று சந்தை கூடியது.

ஆடுகள் விற்பனை மந்தம்

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்திருந்தனர். அதேபோல வியாபாரிகளும் அதிகளவு வந்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகள் விற்பனையாகவில்லை. 25 கிலோ எடை இருக்கும் ஒரு வெள்ளாடு வழக்கமாக ரூ.20 ஆயிரத்துக்கு விலைபோகும். ஆனால், நேற்றைய சந்தையில் ரூ.12 ஆயிரத்துக்குதான் விலை போனது. மற்ற ஆடுகளுக்கும் இதே நிலைதான்.

ஆடுகள் நல்ல விலைக்கு போகும், தீபாவளிக்கு தங்களது குடும்பத்தினருக்கு துணிகள் மற்றும் பொருட்கள் வாங்கி செல்லலாம் என்று எதிர்பார்த்து வந்திருந்தவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. விலை கட்டுபடியாகாததால் சிலர் தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்காமலேயே வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர். இந்த தீபாவளி அமாவாசை நாளில் வருகிறது. அமாவாசை நாளில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை உண்பது இல்லை. இதனால், ஆடு விற்பனை மந்தமாக இருந்ததாக ஆடு வளர்ப்போர் தெரிவித்தனர்.

Next Story