கொசு உற்பத்திக்கு காரணமான தனியார் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்; கலெக்டர் உத்தரவு


கொசு உற்பத்திக்கு காரணமான தனியார் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்; கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 23 Oct 2019 10:45 PM GMT (Updated: 23 Oct 2019 9:22 PM GMT)

திருவள்ளூர் அருகே டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான தனியார் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் அபராதமாக விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

திருவள்ளூர்,

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடுகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் என பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு பழைய டயர்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், பழைய கண்ணாடி பாட்டில்கள் போன்றவை அதிகமாக டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் பராமரிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உடனடியாக அவற்றை அகற்ற உத்தரவிட்டு அந்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். அதைத் தொடர்ந்து உளுந்தை கிராமத்தில் உள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பழைய எண்ணெய் பேரல்கள் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்று இருப்பதை கண்டறிந்து அந்த தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது திருவள்ளூர் தாசில்தார் பாண்டியராஜன், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, பாலசுப்பிரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story