மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? இன்று பிற்பகல் முடிவு தெரியும்


மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? இன்று பிற்பகல் முடிவு தெரியும்
x
தினத்தந்தி 24 Oct 2019 5:30 AM IST (Updated: 24 Oct 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பது இன்று பிற்பகல் தெரிந்து விடும்.

மும்பை,

மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

சட்டசபை தேர்தல்

இந்த அரசின் பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடந்தது.

இதில் ஆளும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன.

தேர்தல் களத்தில் ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் சேனா, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் எம்.ஐ.எம். உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன.

61.13 சதவீதம் வாக்குப்பதிவு

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே, மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மாநில காங்கிரஸ் தலைவர் பாலா சாகேப் தோரட், காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் பிரிதிவிராஜ் சவான், அசோக் சவான், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகிய நட்சத்திர வேட்பாளர்கள் உள்பட 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவானது.

இன்று வாக்கு எண்ணிக்கை

வாக்குப்பதிவை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 288 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 269 மையங்களில் நடக்கிறது. இதற்கான பணியில் 25 ஆயிரம் தேர்தல் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.

அனைத்து மையங்களிலும் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பிறகு மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. பா.ஜனதா , சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பான்மையான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இது பலிக்குமா, பலிக்காதா என்பது இன்று பிற்பகலில் தெரிந்து விடும்.

வெற்றி பெறும் தமிழர் யார்?

மும்பையில் உள்ள சயான் கோலிவாடா தொகுதியில் பா.ஜனதா சார்பில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவர் கணேஷ்குமார் ஆகிய இரண்டு தமிழர்கள் போட்டியிட்டு இருக்கிறார்கள். இவர்களில் வெற்றி வாகை சூடுவது யார் ? என்பது தமிழர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ. தொடர்ந்து 4-வது முறையாக களம் இறங்கினார். அவரை எதிர்த்து சிவசேனா சார்பில் ஆஷிஷ் வசந்த் மோரே போட்டியில் உள்ளார். இருவரில் வெற்றி பெறுவது யார் என்பதை அறிய தாராவி தொகுதி மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

அரியானா

90 இடங்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளம் கட்சிகள் இடையேதான் முக்கிய போட்டி.

முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் (பாரதீய ஜனதா), முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர் சிங் ஹூடா (காங்கிரஸ்), அபய் சிங் (இந்திய தேசிய லோக்தளம்), ஜனநாயக் ஜனதா தலைவர் து‌‌ஷ்யந்த் சவுதாலா உள்பட 1,169 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த 21-ந் தேதி நடந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இங்கும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி இடைவிடாமல் நடக்கிறது. பிற்பகல் வேளையில் அரியானா மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்று தெரிந்து விடும்.

Next Story