சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது கலெக்டர் ராமன் தகவல்


சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 24 Oct 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ராமன் கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய சுகாதார பணியாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மழையால் ஏற்படும் காய்ச்சல், சுகாதார சீர்கேட்டில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத்துறையும் முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 2,467 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட பணியாளர்கள் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தூய்மை தூதுவர்கள்

கொசு ஒழிப்பு பணியாளர்களுடன் இணைந்து செயல்பட 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மற்றும் செவிலியர் கல்லூரி, மருத்துவம் சார்ந்த பட்டய படிப்புகள் படித்து வரும் மாணவ-மாணவிகள் 50 ஆயிரம் பேரை தூய்மை தூதுவர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் வீடுகளில் நல்ல தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் சரவணன் (மேட்டூர்), சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story