மழைக்காலங்களில் செல்போன், ‘வாக்கி டாக்கி’யை அணைத்தால் கடும் நடவடிக்கை வெள்ள தடுப்பு சிறப்பு அதிகாரி எச்சரிக்கை


மழைக்காலங்களில் செல்போன், ‘வாக்கி டாக்கி’யை அணைத்தால் கடும் நடவடிக்கை வெள்ள தடுப்பு சிறப்பு அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2019 10:45 PM GMT (Updated: 24 Oct 2019 6:51 PM GMT)

மழைக்காலங்களில் செல்போன், ‘வாக்கி-டாக்கி’யை அணைத்துவிட்டு பொறுப்பில்லாமல் செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வெள்ள தடுப்பு சிறப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

ஆலந்தூர்,

சென்னை மாநகராட்சி பெருங்குடி 14-வது மண்டல அலுவலகத்தில், மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மண்டல உதவி கமிஷனர் எஸ்.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மண்டல செயற்பொறியாளர்கள் மா.புகழேந்தி, தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக தொழிலாளர் துறை ஆணையரும், பெருங்குடி மண்டல மழைவெள்ள தடுப்பு சிறப்பு அதிகாரியுமான டாக்டர் நந்தகோபால் பங்கேற்றார். இதில் பெருங்குடி மண்டல எல்லைக்குட்பட்ட மாநகராட்சி நெடுஞ்சாலை துறை, பொதுப்பணிதுறை, மின்துறை, சுகாதாரதுறை, தீயணைப்பு துறை, தொலைபேசி தொடர்புதுறை போன்றவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மழை வெள்ளம் ஏற்படும்போது மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குத்து அந்தந்த துறைகளின் அதிகாரிகள் விளக்கி கூறினர். பின்னர் மழை வெள்ள தடுப்பு சிறப்பு அதிகாரி நந்தகோபால் பேசியதாவது:-

வெள்ள நிவாரண பணிகளில் அனைத்து துறையினரும் இணைந்து ஈடுபட வேண்டும். நீர்நிலைகள் மற்றும் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும். குடியிருப்புகளில் மழைநீர் புகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்களின் அறிகுறி தெரிந்தால் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். எல்லா பகுதிகளிலும் மருத்துவ முகாம், கொசுமருந்து அடித்தல், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல் போன்ற பணிகளை தடையின்றி செய்ய வேண்டும்.

எந்த நேரத்திலும் தயாராக பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். செல்போன், ‘வாக்கி-டாக்கி’ போன்றவற்றை மழைக்காலங்களில் அணைத்து வைத்துவிட்டு பொறுப்பில்லாமல் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை பார்வையிட்ட அவர், ஏரிக்கரையை மேலும் பலப்படுத்தும்படி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

Next Story