தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2019 3:30 AM IST (Updated: 26 Oct 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை, 

தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தீபாவளிக்கு தேவையான பட்டாசு, புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக புதுக்கோட்டை நகருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் புதுக்கோட்டை நகரில் காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக கீழராஜவீதி, பிருந்தாவனம் முக்கம், மேலராஜவீதி, நெல்லுமண்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் மர்மநபர்கள் சிலர் இந்த கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க புதுக்கோட்டை நகர் பகுதிகளில் ஆங்காங்கே ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல கீழராஜவீதி மற்றும் அண்ணாசிலை உள்ளிட்ட 3 இடங்களில் போலீசார் உயர்கோபுரங்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

திருட்டை தடுக்கும்பொருட்டு, நகரின் முக்கிய கடை வீதிகளில் மாவட்ட போலீஸ் சார்பில் 32 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கேமராக்களை ஆய்வு செய்ய கீழராஜவீதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருந்து கண்காணிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நகரின் முக்கிய கடைவீதிகளான கீழராஜவீதி, நெல்லுமண்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்பட எந்தஒரு வாகனங்களையும் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. இதேபோல புதுக்கோட்டை ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story