சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் புகழேந்தி திடீர் சந்திப்பு - அ.தி.மு.க.வில் இணைய முடிவா?
சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
சேலம்,
டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர் புகழேந்தி. இவர் கர்நாடக மாநில செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்து வந்தார். சமீபத்தில் டி.டி.வி. தினகரனுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு எதிராக புகழேந்தி செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் நேற்று புகழேந்தி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நீண்ட நேரமாக நடந்தது. முதல்-அமைச்சரை சந்தித்து விட்டு வெளியே வந்த புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இமாலய வெற்றி பெற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்துள்ளார். சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த நான், எனது 35 ஆண்டு கால நண்பரான முதல்-அமைச்சரை சந்தித்து தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான வாழ்த்துக்களையும் தெரிவிப்பதற்காக வந்தேன்.
இப்போது அ.தி.மு.க.வில் சேர வரவில்லை. டி.டி.வி. தினகரனை நம்பி கொடி பிடித்து போனோம். அத்தனை கொடுமைகளையும் சந்தித்தோம். இன்றைக்கு அத்தனையும் இழந்து நிற்கிறோம். அ.ம.மு.க.வில் இருந்து பிரியும் போது உங்களிடம் நிச்சயம் கூறுவேன். உள்ளாட்சி தேர்தல் வந்தால் தினகரன் கதை முடிந்துவிடும். அவரது மறுமுகம் குறித்த ரகசியம் என் கையில் உள்ளது. அதை விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story