கருங்கண்ணி ஊராட்சியில் மண்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்


கருங்கண்ணி ஊராட்சியில் மண்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 27 Oct 2019 4:00 AM IST (Updated: 27 Oct 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

கருங்கண்ணி ஊராட்சியில் மண் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாங்கண்ணி,

கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி ஊராட்சியில் அய்யனார் கோவில் தெரு சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மண் சாலை பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இந்த மண் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீர் வழிந்தோட வடிகால் வசதி இல்லை. இந்த மண்சாலையில் தேங்கி நிற்கும் மழை தண்ணீர் வழியாக தான் அந்த பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் அந்த பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த மண்சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

தார்சாலை

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றி வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும் இந்த மண்சாலையை தார் சாலையாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story