பா.ஜனதா ஆட்சியை தடுக்க ஒன்றிணைவோம் - சிவசேனாவுக்கு, காங்கிரஸ் திடீர் யோசனை
பா.ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சிவசேனாவுக்கு காங்கிரஸ் திடீர் யோசனை தெரிவித்து உள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா இடையே ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவு அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கும் திட்டம் இல்லை என்று அந்த கட்சிகள் மறுத்து வந்தன.
இந்த நிலையில் மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் விஜய் வடேடிவார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எங்களை எதிர்க்கட்சியாக இருந்து பணியாற்ற மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளனர். இருப்பினும் பா.ஜனதா ஆட்சியமைப்பதை தடுத்து நிறுத்த நாம் ஒன்றாக செயல்படுவது அவசியமாகும். சிவசேனா இதற்கு முன்வர வேண்டும். பா.ஜனதாவிற்கு எதிராக மக்கள் தீர்ப்பு அளித்து இருப்பதால் சிவசேனா மாற்று ஏற்பாடுகளுக்கு முன்வர வேண்டும்.
ஆனால் இதுகுறித்து சிவசேனாவுடன் காங்கிரஸ் எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவசேனாவுக்கு காங்கிரஸ் தெரிவித்து உள்ள இந்த புதிய யோசனை மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதை சிவசேனா ஏற்குமா? நிராகரிக்குமா? என்று தெரியவில்லை.
முன்னதாக, ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவை கோரும் வகையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கேலிச்சித்திரம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story