தீபாவளியையொட்டி 2 நாட்களில், ரூ.6¼ கோடிக்கு மதுவிற்பனை
தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.6 கோடியே 34 லட்சத்துக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.
தேனி,
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையில் பட்டாசு, புத்தாடை, பலகாரங்கள் என்று ஒரு புறம் கொண்டாட்டங்கள் இருந்தாலும், மதுபான பிரியர்களும் மற்றொரு புறம் மதுவோடு கொண்டாடுவது வழக்கமாகி விட்டது.
அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை நாளிலும், அதற்கு முன்தினமும் மதுவிற்பனை அதிக அளவில் இருந்தது. டாஸ்மாக் கடைகள் திறக்கும் முன்பே கடை வாசலில் மதுபான பிரியர்கள் காத்திருந்தனர். சில இடங்களில் வரிசையில் நின்று மதுபானம் வாங்கிச் சென்றனர்.
வழக்கத்தை விட இந்த முறை மதுபானம் விற்பனை அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 92 டாஸ் மாக் கடைகள் உள்ளன. இவற்றில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1¼ கோடி வரை மதுவிற்பனை நடக்கும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் (26-ந்தேதி) ரூ.3 கோடியே 22 லட்சத்து 98 ஆயிரத்து 540-க்கு மதுவிற்பனை நடந்தது. தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் ரூ.3 கோடியே 11 லட்சத்து 54 ஆயிரத்து 50-க்கு மது விற்பனை நடந்துள்ளது. 2 நாட்களில் மொத்தம் ரூ.6 கோடியே 34 லட்சத்து 52 ஆயிரத்து 590-க்கு மதுவிற்பனை நடந்துள்ளது.
டாஸ்மாக் கடைகளை போன்று, தனியார் மதுபான பார்களிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. உற்சாகம் ஒரு புறம் இருந்தாலும், தேனி உள்பட பிற நகரங்களில் உள்ள பஸ் நிலையங்களிலும், பொது இடங்களிலும் போதை தலைக்கேறி சிலர் விழுந்து கிடந்ததை காண முடிந்தது.
Related Tags :
Next Story