விருதுநகர் வழியே செல்லும் மதுரை–குமரி 4 வழிச்சாலையை விரிவுபடுத்த திட்டம் உள்ளதா? தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கமளிக்க கோரிக்கை


விருதுநகர் வழியே செல்லும் மதுரை–குமரி 4 வழிச்சாலையை விரிவுபடுத்த திட்டம் உள்ளதா? தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கமளிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 29 Oct 2019 11:00 PM GMT (Updated: 29 Oct 2019 3:15 PM GMT)

விருதுநகர் வழியாக செல்லும் மதுரை–குமரி தேசிய நெடுஞ்சாலை தற்போது 4 வழிச்சாலையாக உள்ள நிலையில் இதனை விரிவாக்க ஏதேனும் திட்டம் உள்ளதா எனபதை பற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மதுரையில் இருந்து குமரி வரை தேசிய நெடுஞ்சாலை (எண்–7) செல்கிறது. இந்தச் சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்ட பின்பு வாகனங்கள் எளிதாக செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது இந்த 4 வழிச்சாலை முறையாக பராமரிக்கப்படாததால் பல்வேறு இடங்களில் 4 வழிச்சாலையும், 4 வழிச்சாலையில் உள்ள மேம்பாலங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும் கிராமங்களின் விலக்கு பகுதியில் உள்ள மின் விளக்குகளும் சேதமடைந்துள்ளது. இது பற்றி பல முறை எடுத்துக்கூறியும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் விருதுநகர்–சாத்தூர் இடையே 4 வழிச்சாலையில் உள்ள விபத்து பகுதியான கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் படந்தால் விலக்கு ஆகிய பகுதிகளில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல முறை சுட்டிக்காட்டப்பட்டும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏற்கனவே கடந்த 2014–ம் ஆண்டு இறுதியில் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இந்த பணி முடங்கியதால் அதற்கான நடவடிக்கையை எடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தயாராக இல்லை.

இந்த நிலையில் மதுரை–குமரி நெடுஞ்சாலையில் விருதுநகர் பகுதியின் வடபுறம் இச்சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்ற கருத்து உள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சாலையின் கிழக்கு பக்கத்தில் 10 அடி தூரத்தில் தனியார் நிலங்களிலும் கற்களை நட்டுள்ளனர். இதனால் தனியார் நில உரிமையாளர்கள் சாலை விரிவாக்கம் செய்யப்படும் போது தங்கள் நிலங்கள் கையகப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அந்தப் பகுதியில் கட்டிடம் கட்டி உள்ளவர்களும் தங்கள் கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சுகின்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் வீட்டடி மனை, காலி இடங்கள் வைத்திருப்போர் தங்கள் அவசர தேவைக்கு காலி இடங்களை விற்க நினைத்தாலும் வாங்க வருபவர்கள் நெடுஞ்சாலை ஆணையத்தால் கற்கள் நடப்பட்டுள்ளதால் இந்த நிலம் கையகப்படுத்தப்படும் என்ற எண்ணத்தில் அதை வாங்க முன் வர தயங்குகின்றனர். இதனால் நிலத்தை விற்க நினைப்பவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டம் ஏதும் அறிவிக்கப்படாத நிலையில் முன்கூட்டியே கற்களை நட்டுள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நான்கு வழிச்சாலை விரிவாக்கம் செய்யப்படுமா என்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் ஏற்கனவே நடப்பட்ட கற்களை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story