கோத்தகிரி பகுதியில் மழை: பஸ்நிலைய கட்டிடத்தின் மீது மண்சரிவு
கோத்தகிரி பகுதியில் பெய்த மழையின் காரணமாக பஸ்நிலைய கட்டிடத்தின் மீது லேசான மண்சரிவு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் கடந்த வாரம் பலத்த மழை பெய்ததால் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிறிய பாறைகள் செங்குத்தான பகுதியில் இருந்து கீழே விழுந்ததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்து சேதம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பேரூராட்சி பணியாளர்கள் அங்கு விழுந்திருந்த மண் மற்றும் பாறைகளை உடனடியாக அகற்றினர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரசு நிலம் மற்றும் தனியார் பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள அபாயகரமான கற்பூர மரங்களை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது செங்குத்தான பகுதியில் அமைந்துள்ள மரங்கள் தாழ்வான பகுதியில் உள்ள பஸ்நிலையம் பகுதியில் சரிந்து விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக அந்த மரங்களை வெட்ட உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த கற்பூர மரங்கள் வெட்டி அகற்றும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மிதமான மழையின் காரணமாக ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்ட பஸ்நிலையம் பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் பஸ் நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த செயல் அலுவலர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் பஸ் நிலைய கட்டிடத்தின் மீது விழுந்து கிடந்த மண்ணை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
பின்னர் பேரூராட்சி ஊழியர்கள் மண்ணை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும் இப்பகுதியில் வளர்ந்துள்ள கற்பூர மரங்கள் அனைத்தையும் வெட்டி அகற்றும் பணியும் விரைந்து நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் அடிக்கடி மண் சரிந்து விழுவதை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்ட திட்டம் தீட்டுவதற்காக பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் அப்பகுதியை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன் கூறுகையில், பஸ்நிலையத்தை ஒட்டி மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக புவியியல் துறைக்கு மண்ணை ஆய்வுக்காக அனுப்பி உள்ளோம். அந்த அறிக்கை வந்தவுடன் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து உரிய நிதி பெற்று பஸ் நிலையம் பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story