நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சூறைக்காற்றுக்கு வீட்டின் ஓடு பெயர்ந்து விழுந்து பெண் காயமடைந்தார்.
நெல்லை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு, அம்பை, ஆய்க்குடி, சங்கரன்கோவில், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 113.25 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி 113.55 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 575.58 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 354.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடியில் இருந்து 126.05 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 49.80 அடியில் இருந்து 50.10 அடியாகவும் உயர்ந்தது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 120 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.
நெல்லையில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது. பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் மழை பெய்தது. பின்னர் மதியம் 2 மணி, இரவு 7 மணியளவிலும் மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் சிரமப்பட்டு சென்றனர்.
குற்றாலத்தில் நேற்று காலை முதல் வெயிலே இல்லை. சாரல் மழை தூறிக் கொண்டே இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் மாலை 3.45 மணிக்கு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றி, குளிக்க தடை விதித்தனர். இதனால் அவர் கள் ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளுக்கு சென்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக குற்றாலத்தில் மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இருந்தபோதும், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால், கூட்ட நெரிசலின்றி அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
நாங்குநேரியை அடுத்து மூலைக்கரைப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள பட்டபிள்ளைபுதூரில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் ஏராளமான மரங்கள், வீடுகளின் மேற்கூரைகள் சரிந்தது. அப்போது வீட்டின் முன்பு ஓட்டு கொட்டகைக்கு கீழ் படுத்து தூங்கி கொண்டிருந்த கொம்பையா மனைவி ராசம்மாள் (வயது 75) என்பவர் மீது ஓடுகள் பெயர்ந்து விழுந்ததில், அவர் காயம் அடைந்தார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அப்பகுதியில் உள்ள மின்கம்பம் சரிந்து ஒரு வீட்டின் மேல் விழுந்தது. தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை சம்பவ இடத்துக்கு வந்து அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடங்களை பார்வையிட்டு சேதம் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம் - 64, மணிமுத்தாறு - 30, அம்பை - 26, சேரன்மாதேவி- 19, ஆய்க்குடி - 14.20, பாளையங்கோட்டை - 6, நெல்லை-5.50, நாங்குநேரி - 5.20, சங்கரன்கோவில் - 5, ராதாபுரம் - 4, செங்கோட்டை - 2, தென்காசி - 2.
Related Tags :
Next Story