நாகை, திருமருகல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை: சுனாமி குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்தது


நாகை, திருமருகல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை: சுனாமி குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 30 Oct 2019 4:30 AM IST (Updated: 30 Oct 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

நாகை, திருமருகல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சுனாமி குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருமருகல்,

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல நாகை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.இந்த நிலையில் நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தில் சுனாமி குடியிருப்பில் வேல்முருகன் என்ற மீனவரின் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்த வேல்முருகன், அவருடைய மனைவி வதனி, மகள் வித்யா உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தொடர் மழை காரணமாக சுனாமி குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மின்கம்பங்கள் சாய்ந்தன

இதேபோல திருமருகல் பகுதியில் நேற்று காலை தூறல் மழையாக பெய்ய தொடங்கியது. இதை தொடர்ந்து கன மழையாக பெய்தது. பின்னர் மதியத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த பலத்த காற்றினால் திருமருகல் அருகே ஆதினக்குடி அவரிமேட்டுத் தெரு மெயின்சாலையில் இருந்த தென்னைமரம் மற்றும் இதன் அருகில் இருந்த 2 மின் கம்பங்கள் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் மின் கம்பிகள் அறுந்து சாலையில் கிடந் தது. அப்போது மின்சாரம் தடை செய்யப்பட்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சாலையில் விழுந்து கிடந்த தென்னை மரம் மற்றும் மின்கம்பங்களையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அப்பகுதி மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.

ஆதினக்குடி, குருவாடி, அண்ணாமண்டபம், போலகம், திருப்புகலூர், சீயாத்தமங்கை, திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் பத்தாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. உப்பு உற்பத்தியில் தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் வேதாரண்யம் உள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் உப்பள பகுதிகள் பாதிக்கப்பட்டு, கடல் சேறு 1 அடிக்கு மேல் புகுந்து விட்டது. இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 40 சதவீத மட்டுமே நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இடங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது.

தற்போது தொடர்ந்து வேதாரண்யத்தில் மழை பெய்து வருவதால் உப்பளங்களில் தண்ணீர் புகுந்து உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உப்பு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story