பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை, பணம் கொள்ளை வழக்கு: கொள்ளையர்கள் சுரேஷ், கணேசன் மீண்டும் சிறையில் அடைப்பு


பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை, பணம் கொள்ளை வழக்கு: கொள்ளையர்கள் சுரேஷ், கணேசன் மீண்டும் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 29 Oct 2019 11:00 PM GMT (Updated: 29 Oct 2019 8:23 PM GMT)

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை, பணம் கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையர்கள் சுரேஷ், கணேசன் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி நெ.1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 470 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.19 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி ரூ.13 கோடியே 9 லட்சம் மதிப்பிலான 30 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், அவரது அக்காள் மகன் சுரேஷ், மதுரை சோழங்கநல்லூர் குருவித்துறை கிராமத்தை சேர்ந்த கணேசன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய கொள்ளை கும்பல் தான் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மற்றவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் கணேசனை விசாரிக்க கொள்ளிடம் போலீசார் கடந்த 18-ந் தேதி முதல்கட்டமாக ஸ்ரீரங்கம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சிவகாமசுந்தரி, கணேசனை 7 நாட்கள் (24-ந் தேதி வரை) போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். போலீஸ் விசாரணையின்போது கணேசன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சொகுசு சுற்றுலா வேன் ஒன்றும், 3 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 1½ கிலோ தங்கம் லலிதா ஜூவல்லரியிலும், 1½ கிலோ தங்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கொள்ளையடிக்கப்பட்டது ஆகும்.

போலீஸ் காவலில் விசாரணை முடிந்ததும் கணேசனை 24-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் 2-வது கட்டமாக மீண்டும் கணேசனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து நேற்று (29-ந் தேதி) வரை 6 நாட்கள் விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு அனுமதியளித்தார்.

இதற்கிடையில் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மற்றொரு கொள்ளையன் சுரேசையும் கொள்ளிடம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். சுரேஷ், கணேசன் இருவரையும் வெவ்வேறு இடங்களில் வைத்து விசாரணை நடத்தினர். சுரேஷ் கொடுத்த தகவலின் பேரில், மதுரை மாவட்டம், சமயநல்லூர் வைகைத்தெருவில் உள்ள அவருக்கு சொந்தமான அலுமினிய உற்பத்தி ஆலையின் பின்புறம் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளை போலீசார் அளவீடு செய்து பார்த்ததில் ½ கிலோ எடை இருந்தது.

நேற்றுடன் கணேசன், சுரேஷ் ஆகியோரின் போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, இருவரையும் கொள்ளிடம் போலீசார் ஸ்ரீரங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் 3¾ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக கணேசன் மற்றும் சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் கணேசன் கொடு்த்த தகவலின் பேரில் 1½ கிலோ தங்க நகைகளும், சுரேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் ½ கிலோ தங்க கட்டிகள் என மொத்தம் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் 1¾ கிலோ தங்கம் இன்னும் கண்டுபிடிக்க வேண்டியிருப்பதால், சுரேசை மீண்டும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இன்று (புதன்கிழமை) கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். அடுத்து இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முருகனையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story