ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பின் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் கலெக்டர் தகவல்


ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பின் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2019 4:30 AM IST (Updated: 30 Oct 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பின் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், புதியதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கும்பொழுது உரிய அரசு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு அமைத்திட ஒப்பந்தகாரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பணி முடிந்தவுடன் பாதுகாப்பாக மூடப்பட்டு அதன்பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பயன்படுத்தாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் அரசின் அறிவுறுத்தலின்படி மழை நீர் சேகரிக்கும் அமைப்பாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி எண்

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், தனியார் இடங்கள் மற்றும் பொது இடங்களிலும் உள்ள அனைத்து பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி பொது கிணறுகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் மூடப்பட்டதற்கான சான்றுகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உள்ளாட்சிதுறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு நட வடிக்கை மேற்கொண்டமைக்கான அறிக்கை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் இருப்பின் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் தாசில்தாரிடம் பொதுமக்கள் தெரிவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனினும், பொதுமக்களோ, அல்லது ஊடகத்துறையினரோ பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் திறந்த வெளியில் மூடப்படாமல் இருப்பின் அதுகுறித்து 18004259013 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஊராட்சிகள் உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story