சேலத்தில் 5-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்
சேலத்தில் நேற்று 5-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அரசு டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று 5-வது நாளாக டாக்டர்களின் வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அனைத்து பிரிவுகளிலும் பயிற்சி டாக்டர்கள் மட்டுமே பணியில் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த 90 சதவீத டாக்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் உள்ள 90 சதவீதம் டாக்டர்களும் பதிவேட்டில் கையெழுத்திடாமல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியை பொறுத்த வரையில் குறிப்பிட்ட சிலரை தவிர மற்ற அனைத்து டாக்டர்களும் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
அதேபோல், மருத்துவ படிப்பு மாணவர்களும், பயிற்சி டாக்டர்களும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவசர சிகிச்சை மற்றும் அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story