ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் - ‘எங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதா என கேள்வி’
பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை விடவேண்டும் என்றனர்.
மும்பை,
மும்பையை தலைமையிடமாக கொண்டு பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பி.எம்.சி.) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ரூ.4 ஆயிரத்து 355 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பி.எம்.சி. வங்கியின் செயல்பாட்டை ரிசர்வ் வங்கி முடக்கியது. வாடிக்கையாளர்கள் தற்போது ரூ.40 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க முடியாத அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஏற்கனவே 6 பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் உயிரிழந்துவிட்டனர்.
இந்தநிலையில் நேற்று பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் சுமார் 200 பேர் பாந்திரா குா்லா காம்ப்ளக்சில் உள்ள ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:-
பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கைவிட வேண்டும். உடனடியாக பி.எம்.சி. வங்கியை செயல்பட அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த முழுத்தொகையையும் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story