டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 1,484 பணியாளர்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்


டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 1,484 பணியாளர்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2019 4:30 AM IST (Updated: 30 Oct 2019 8:21 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 1,484 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. எனவே கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் மற்றும் தண்ணீரால் பரவும் மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்களில் இருந்து பொது மக்களை பாதுகாக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ள சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

நோயாளிகள் விவரம்

அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் 148 தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் விவரம் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட கிராமங்களில் தடுப்பு நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வட்டார அளவிலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் நோயாளிகளுக்கு பரிசோதனைக்கான கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஊராட்சி ஒன்றியங்களில் 420 பணியாளர்களும், பேரூராட்சிகளில் 693 பணியாளர்களும், நகராட்சிகளில் 63 பணியாளர்களும், மாநகராட்சியில் 298 பணியாளர்களும், தேசிய சுகாதார இயக்கம் சார்பில் 10 பணியாளர்களும் என மொத்தம் 1484 பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கொசுவை கட்டுப்படுத்த 245 புகை மருந்து அடிக்கும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது  என் றார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் செய்யது சுலைமான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.   


Next Story