நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் குறித்து பயிற்சி வகுப்பு
உள்ளாட்சி தேர்தல் குறித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆரணி,
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஆரணியில் நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார் தலைமையில் உள்ளாட்சி தேர்தலின் போது மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை எப்படி கையாள்வது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நகராட்சி அலுவலக மேலாளர் நெடுமாறன், நகராட்சி பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை பயிற்சியாளரும், ஆரணி நகரமைப்பு ஆய்வாளருமான கே.பாலாஜி பயிற்சி வழங்கினார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர் மனுதாக்கல் செய்யும்போது அவருடன் எத்தனைபேர் வர வேண்டும். வேட்பாளர் பெயரை எத்தனைபேர் முன்மொழிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் முறையாக உள்ளதா என ஆய்வு செய்து பின்னர் மனுக்களை பெற வேண்டும். வாக்குப்பதிவின்போது மின்னணு எந்திரங்களில் ஏற்படும் சிறு, சிறு பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்து கொள்ளும் முறை குறித்தும் விளக்கப்பட்டு வீடியோ காட்சி மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சியில் நகராட்சி ஆணையாளர்கள் பார்த்தசாரதி (வந்தவாசி), ஸ்டேன்லிபாபு (திருவத்திபுரம்), பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஜஸ்மியாபானு (களம்பூர்), லோகநாதன் (பெரணமல்லூர்), விஜயா (சேத்துப்பட்டு), எஸ்.கணேசன் (தேசூர்) மற்றும் தேர்தல் உதவி அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story