நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: அய்யம்பாளையம் மருதாநதி அணை 70 அடியை எட்டியது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் பலத்த மழை காரணமாக அய்யம்பாளையம் மருதாநதி அணை 70 அடியை எட்டியது. இதன்காரணமாக மருதாநதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டிவீரன்பட்டி,
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் பலத்த மழை காரணமாக பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் உள்ள மருதாநதி அணை வேகமாக நிரம்பி வருகிறது. 72 அடி உயரம் கொண்ட அந்த அணைக்கு நீராதாரமாக விளங்கக்கூடிய தாண்டிக்குடி மலைப்பகுதி, பண்ணைகாடு, பாச்சலூர், கடுகுதடி போன்ற மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டி வருகிறது. தற்போது அணைக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மருதாநதி அணை ஓரிரு நாளில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுப்பணித்துறை சார்பில் மருதாநதி கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள அய்யம்பாளையம், சித்தரேவு, பட்டிவீரன்பட்டி, எம்.வாடிப்பட்டி மற்றும் மருதாநதி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அணையில் தற்போது நீர் இருப்பு 165 மில்லியன் கன அடியாக உள்ளது. அணை நிலவரத்தை செயற்பொறியாளர் சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், அணை பொறியாளர் மோகன்தாஸ் ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணை நிரம்பியதும், அணைக்கு வரும் 60 கன அடி தண்ணீரை அப்படியே வெளியேற்ற உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story