மழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பேரூர் தரைப்பாலம் மூழ்கியது


மழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; பேரூர் தரைப்பாலம் மூழ்கியது
x
தினத்தந்தி 31 Oct 2019 4:15 AM IST (Updated: 31 Oct 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பேரூர் தரைப்பாலம் மூழ்கியது. குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கோவையிலும் கடந்த சில நாட்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. கோவையையொட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து கனமழை கொட்டியது.

தொடர்ந்து மழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் இந்த ஆறு மூலம் தண்ணீர் பெற்று வரும் அனைத்து குளங்களுக்கும் மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே குளங்கள் நிரம்பி வழிந்து வரும் நிலையில், மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டதால், தொடர்ந்து குளங்கள் நிரம்பி வழிந்து வருகின்றன.

குறிப்பாக கோவையை அடுத்த பேரூரில் உள்ள பெரியகுளம் நிரம்பும் தருவாயில் இருந்தது. ஒரு அடி தண்ணீர் வந்தால் நிரம்பி வழிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட் டது. ஆனால் மழை நின்றதால் அந்த குளம் நிரம்பவில்லை. தற்போது நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் நேற்று முன்தினம் இரவில் அந்த குளம் நிரம்பி வழிந்தது.

உபரிநீர் வாய்க்கால் வழியாக சென்று பேரூர் அருகே நொய்யல் ஆற்றில் கலந்தது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த குளம் நிரம்பியதால் அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அத்துடன் பலர் நிரம்பி வழியும் குளத்தை பார்த்து செல்கிறார்கள். இதற்கிடையே இந்த குளத்தின் பின்பகுதியில் சிலர் கரும்பு, வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்து இருந்தனர். அந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

நொய்யல் ஆற்றுக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று காலை மேலும் அதிகரித்தது. இதனால் பேரூர் படித்துறை ஒட்டி உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் சிலர் தரைப்பாலத்துக்கு மேலே செல்லும் தண்ணீரில் ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.

பேரூரில் இருந்து வேடப்பட்டி, நாகராஜபுரம், வீரகேரளம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் செல்வபுரத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி வழியாக செல்லும் சாலையில் சென்று, ஆண்டிப்பாளையம் வழியாக மாற்றுப்பாதையில் சென்றன. இந்த ரோடு குறுகலாக இருப்பதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நண்டங்கரை, பெருமாள் கோவில்பதியில் உள்ள தடுப்பணை, வைதேகி அருவி ஓடையில் உள்ள தடுப்பணை ஆகியவையும் நிரம்பி வழிகின்றன. நொய்யல் ஆற்றில் உள்ள சித்திரைச்சாவடி, தண்ணீர் பந்தல், குறிச்சி, குனியமுத்தூர், சுண்ணாம்பு காளவாய் உள்பட பல்வேறு தடுப்பணைகள் நிரம்பி வழிவதால், அங்கு இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆறு மூலம் 25 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட குளங்கள் ஏற்கனவே நிரம்பி வழிந்து விட்டன. தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் 25 குளங்களுமே நிரம்பி வழிந்து வருகிறது. இதுதவிர எஸ்.எஸ். குளம், அன்னூர், கோவில்பாளையம் பகுதியில் உள்ள 8 குளங்களுக்கும் தண்ணீர் செல்வதால் 75 சதவீதம் நிரம்பி உள்ளது என்றனர். 

Next Story