குறைவான உயரம் உடைய ஷட்டரால் கண்மாய்க்கு செல்லாத மழைநீர்: விவசாயிகள் வேதனை


குறைவான உயரம் உடைய ஷட்டரால் கண்மாய்க்கு செல்லாத மழைநீர்: விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 31 Oct 2019 4:45 AM IST (Updated: 31 Oct 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே கால்வாயின் ஷட்டர் உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளதால் மழைநீர் கண்மாய்க்கு செல்லாமல் வீணாக ஆற்றுப்பகுதிக்கு செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருமங்கலம்,

திருமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 4 மணி முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் முக்கிய சாலை மற்றும் வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருமங்கலத்தில் சாக்கடை தண்ணீர் ஓடிய வடகரை கால்வாயில் நேற்று பெய்த மழையால் பல ஆண்டுகளுக்கு பின்பு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த கால்வாயில் சமீபத்தில்தான் மதகு மற்றும் ஷட்டர்கள் பொதுப்பணித்துறையினரால் பழுது பார்க்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் ஆஞ்சநேயர் கோவில் அருகே புதிதாக அமைக்கப்பட்ட ஷட்டரின் உயரம் குறைவாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள கண்மாய்க்கு மழைநீர் செல்லாமல் குண்டாறு வழியாக பிரியும் கால்வாயின் வழியாக தண்ணீர் ஓடியது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் அமைக்கப்பட்ட ஷட்டர், கால்வாயை தூர்வாரிய போது உடைந்து விட்டது. இதனை சமீபத்தில்தான் பொதுப்பணித்துறையினர் சரி செய்தனர். ஆனால் கால்வாயின் உயரத்தை காட்டிலும் ஷட்டரின் உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் ஷட்டரை தாண்டி வெளியே செல்கிறது. ஷட்டர் சரியாக இருந்தால் அந்த மழைநீர் கண்மாய்க்கு செல்லும். கண்மாயில் தண்ணீர் தேங்கினால் விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றாக மழை பெய்தும் நீர் கண்மாய்க்கு செல்லாதது வேதனை அளிக்கிறது” என்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வடகரை கால்வாயில் கழிவு நீருக்கு பதிலாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story